வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கோவையில் தனியார் உணவகம் சார்பில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ‘ரயில் பெட்டி’ என்ற உணவகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 30 நிமிடங்களில் 6 சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்ச ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டது. 5 சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் ரூபாய், 4 சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் ரூபாய் என பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், 500க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவக உரிமையாளர் பாபி செம்மனூர், இந்த போட்டி வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களில் 100 பேருக்கு வீடு கட்ட இலவசமாக இடம் வழங்குவதற்காக நிதி திரட்டுவதாகக் கூறினார். மேலும், தனது சொந்த லாபத்தில் இருந்து பொதுமக்களுக்கு உதவி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.