பெரும்பாலான வேலையில்லாத சீன இளைஞர்களை சமூக ஊடகங்கள் அழுகிய வால் குழந்தைகள் என்று புதுப் பெயரிட்டு அழைக்கின்றன. சீனாவில் வேலையின்மை அதிகரிப்பிற்கு என்ன காரணம்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…
2021ம் ஆண்டிலிருந்து சீனாவின் பொருளாதாரத்தை பாதித்த பல்லாயிரக்கணக்கான கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கு “அழுகிய வால் கட்டிடங்கள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அதே போல் இப்போது ஏராளமான சீன இளைஞர்கள் வேலையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்/ எனவே அவர்கள் அழுகிய வால் குழந்தைகள் என்று அழைக்கப் படுகிறார்கள்.
கொரொனா காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, நாட்டில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. அதற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்த்திருந்த சீன இளைஞர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
இந்த ஆண்டு சீனாவில் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் வேலை தேடியும் வேலை கிடைக்கவில்லை என்கின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதன்முறையாக 16-24 வயதுடைய சுமார் 100 மில்லியன் சீன இளைஞர்களின் வேலையின்மை 20 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்தது. 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு 21.3 சதவீதத்தைத் தாண்டி வளர்ந்தது.
தொடரும் இந்த மோசமான சூழ்நிலையில் சீன இளைஞர்களுக்கு வேலையின்மை ஒரு பெரும் தலைவலியாகவே உள்ளது.
இந்த ஜூலை மாதத்தில் 11.79 மில்லியன் சீன கல்லூரி மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்குச் செல்ல காத்திருக்கிறார்கள். ஆனால் நாட்டின் வேலையின்மை சுமார் 17.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் நெருக்கடியால் சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் சொல்லப் படுகிறது.
வேலை கிடைக்காத சீன இளைஞர்களில் பலர் தங்கள் பெற்றோரின் ஓய்வூதியம் மற்றும் சேமிப்பை நம்பி வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
கல்வி பயில பல ஆண்டுகளைச் செலவழித்து முதுகலை பட்டம் பெற்ற நிலையிலும் சீன இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாக இருக்கிறது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவது அரசின் முன்னுரிமையாக இருக்கும் என்று கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங், அதற்கான திட்டங்களையும் வழிமுறைகளையும் உருவாக்கிய போதிலும் வேலையின்மை அதிகரித்து வருகிறது .
1999 ஆம் ஆண்டில், சீனா தனது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்த படித்த ஊழியர்களை உருவாக்க நினைத்தது. பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் சேர்க்கை அளவை கூட்டியது.
ஆனால் சீன அரசு, பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கோட்டைவிட்டது. அடுத்த பத்து ஆண்டுகளில் சீனாவில் புதிய கல்லூரி பட்டதாரிகளின் எண்ணிக்கை சுமார் 18 மில்லியனாக கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அவநம்பிக்கையில் இருக்கும் வேலை தேடும் இளம் சீன இளைஞர்கள், மோசடி மற்றும் குற்றச் செயல்களில் திசை மாறவும் வாய்ப்பிருப்பதாக சமூக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.