கலையுலகில் கற்பக தருவாக, நடிப்பு சிம்மாசனத்தில் நிரந்தர பேரரசராக வீற்றிருக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96 வது பிறந்தநாள் இன்று. வெள்ளித் திரையில் நவரசங்களை வெளிப்படுத்திய கலைஞனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விழுப்புரத்தைச் சேர்ந்த சின்னைய்யா – ராஜாமணி தம்பதிக்கு 1928ம் ஆண்டு, அக்டோபர் 1ம் தேதி பிறந்த நான்காவது குழந்தைக்கு கணேசமூர்த்தி என்று பெயர் சூட்டினார்கள்.
சிறு வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறிய கணேசமூர்த்தி, யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை என்பவர் நடத்தி வந்த, மதுரை ஸ்ரீ பாலகான சபாவில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பிறகு எம்.ஆர். ராதாவின் நாடகக் குழுவிலும், சகஸ்ரநாமத்தின் நாடகக் குழுவிலும் நடித்து வந்த கணேசமூர்த்தி, பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து இராஜ்ஜியம் நாடகத்தில் மராட்டிய மாமன்னன் வீரசிவாஜியாக நடித்தார்.
சுயமரியாதை இயக்க மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட அந்த நாடகத்தைப் பார்த்த பெரியார், சிவாஜியாக நடித்த கணேசனுக்கு ‘சிவாஜி’ என்று பெயர் சூட்டினார்.
1950ஆம் ஆண்டு தொடங்கிய பராசக்தி திரைப்படம், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், 1952 ஆம் ஆண்டு வெளியானது. பராசக்தி, அபார வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, பரபரப்பான நடிகரானார் சிவாஜிகணேசன்.
1953 ஆண்டுக்குள் 7 படங்களில் நடித்து முடித்த சிவாஜி, 1957ம் ஆண்டுக்குள் 45 படங்களில் நடித்து முடித்தார். பிறகு, 1979ம் ஆண்டுக்குள் 200 படங்களில் நடித்து முடித்தார் சிவாஜி.
பராசக்தி தொடங்கி, பூப்பறிக்க வருகிறோம் வரை கிட்டத்தட்ட 2 இந்தி படங்கள், 9 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சிவாஜி கணேசன் ஒரு நடிப்புச் சுரங்கமாக, நடிப்பு சக்கர வர்த்தியாகவே திகழ்ந்தார்.
‘பலே பாண்டியா’ படத்தில், மூன்று வெவ்வேறு வேடங்களில் சிவாஜி கணேசன், நடிக்கும் போது, வெறும் 11 நாட்களில் ஒட்டு மொத்த படத்தையும் நடித்து கொடுத்திருக்கிறார். வெற்றிப் பெற்ற உச்ச நடிகராக, ஹீரோவாக நடித்த காலத்திலும்,பல மாறுபட்ட பாத்திரங்களிலும் சிவாஜி கணேசன் நடிக்கத் தயங்கியதில்லை.
எம்ஜிஆருக்கு எதிராக கூண்டுக் கிளி படத்திலும், “நடிப்பிசைப் புலவர்” கே.ஆர்.ராமசாமிக்கு எதிராக துளி விஷம் படத்திலும், பெண்களை ஏமாற்றுபவராக திரும்பிப் பார் படத்திலும், நன்றிகெட்ட கணவனாக இல்லற ஜோதி படத்திலும் சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.
சுயநலத்துக்காக தாய் நாட்டின் ரகசியங்களை எதிரிக்கு விற்கும் தேசத் துரோகியாக,அந்த நாள் படத்திலும், தமிழ் சினிமாவின் வரலாற்றில் முதல் “ஸ்டைலிஷ்” வில்லனாக உத்தம புத்திரன் படத்திலும், மேலும், இருவர் உள்ளம், ஆலய மணி, புதிய பறவை, தீபம் ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் தன் நடிப்புத் திறமையைச் செம்மையாக வெளிப்படுத்தி இருப்பார் சிவாஜி கணேசன்.
கடந்த 1963ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, 1966 ஆம் ஆண்டு,மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது ,பிறகு 1984 ஆம் ஆண்டு, மத்திய அரசின் பத்ம பூஷண் விருது, 1986 ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம், 1995ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசின் செவாலியே விருது, 1997 ஆம் ஆண்டு, இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது என பல விருதுகள் சிவாஜி கணேசனுக்கு வழங்கப் பட்டன.
மிகச் சிறந்த நடிகரான சிவாஜி கணேசன் கடைசி வரை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத தடத்தைப் பதித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்களைத் தன் நடிப்புக் கலையால் கட்டிப் போட்டிருந்தார் என்பது உண்மை.
வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்‘, ‘தெனாலி ராமன்’, ‘கர்ணன்‘, ‘ராஜா ராஜா சோழன்’, அரிச்சந்திரா, மகா கவி காளிதாஸ் என வரலாற்றில் பெயர்பெற்ற கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, சிவபெருமான்,முருகப் பெருமான் என புராண கதா பாத்திரங்களுக்கும் தனது நடிப்பின் மூலம் உயிரூட்டியவர் சிவாஜி கணேசன் என்றால் மிகையில்லை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றும், அவரைப் பெற்றதால் இந்த நாடே பெருமை அடைகிறது என்றும் கர்ம வீரர் காமராஜர் குறிப்பிட்டிருக்கிறார்.
2001ஆம் ஆண்டில் சிவாஜி கணேசன் மறைந்தபோது “கட்டபொம்மனாக அவர் நடித்ததைப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கூர்மையான வசனம், கத்தியைவிட ஆழமாகப் பாயும் என்பதை உணர்த்திய அற்புதமான நடிகர் சிவாஜி, என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாராட்டி இருக்கிறார்.
ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித் திரையில் தன் நடிப்பால் கொட்டிக்காட்டிய சிவாஜி கணேசனுக்கு நடிப்பு என்பது தொழில் அல்ல உயிர் மூச்சு. மனித குலத்தின் கடைசி ரசிகன் இருக்கும் வரை வரை, சிவாஜி கணேசனின் புகழ் நிலைத்திருக்கும்.