தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டங்கள் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தி கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6 ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 58 இடங்களில் அனுமதி கேட்ட நிலையில் 52 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாங்காடு உள்ளிட்ட இடங்களில் பள்ளி நிர்வாகத்தினர் அனுமதி அளிக்காததால் அணிவகுப்புக்கு அனுமதிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு கூட்டம் ஏன் நடத்த கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதிக்கும் பட்சத்தில் காவல்துறை அனுமதி மறுப்பது ஏன் என வினவினார்.
தனியார் பள்ளிகளில் மற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறதே என கேள்வி எழுப்பிய நீதிபதி புதிய விதிகள் கட்டுப்பாடுகளை ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு விதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.
தமிழகம் முழுவதும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணிக்குள் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ளலாம் என நீதிபதி ஜெயச்சந்திரன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.