தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28 முதல் 30ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து 11,176 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 2,910 பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது
தீபாவளி பண்டிகை நிறைவடைந்த பின்னர் நவம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் மொத்தமாக 12, 606 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு மையங்கள் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
பயணிகளின் வசதிக்காக 24*7 செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்றும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044 – 24749002, 044 – 26280445, என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்றும் சிவசங்கர் கூறினார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், மாதவரம் செல்ல 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், போதுமான பேருந்துகள் இயக்கப்படும், தேவைப்படும் பட்சத்தில் தனியார் பேருந்துகளை வாடகை எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தனியார் பேருந்துகள் அவரவர் ஓட்டுநர்களின் மூலமாகவே இயக்கப்படும் என்றும், பொதுமக்களின் நன்மைக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்ல வேண்டாம். திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் சாலை வழியாக செல்ல வேண்டும் என சிவசங்கர் அறிவுறுத்தினார்.