சீன அச்சுறுத்தல் காரணமாக, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அதிகரித்து வரும் பதற்ற சூழலில், அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்க இருப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2022 ஆண்டு மே மாதத்தில் மத்திய-இடது தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஆஸ்திரேலியா தனது இராணுவ கட்டமைப்பை சீரமைத்து வருகிறது.
இந்திய-பசிபிக் பகுதியில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பெரும் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா தனது ராணுவ திறனை மேம்படுத்தி வருகிறது.
அந்த வகையில், உள்நாட்டில் ஏவுகணைகளை உருவாக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டது. சிட்னிக்கு அருகிலுள்ள கடற்படை மற்றும் வான்வழி கூட்டுத் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக மறுவடிவமைக்கப்படுகிறது. அதிநவீன ஏவுகணைகளை (JSM) உருவாக்கும் இந்த திட்டம் 570 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும்.
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் அதிநவீன F-35A விமானங்களில் பொருத்தக்கூடிய JSM களை உற்பத்தி செய்யும் இந்தத் தொழிற்சாலை, ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் வரை தயாரிக்கும் என்றும், 2027ம் ஆண்டிலிருந்து உற்பத்தியைத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் திட்டத்தையும் ஆஸ்திரேலியா செயற்படுத்த தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு 975 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணை அமைப்புக்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்துள்ளது.
கடந்த திங்கள் கிழமை அமெரிக்கா சென்றிருந்த ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பாட் கான்ராய், 7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில்,ஸ்டாண்டர்ட் ஏவுகணைத் தொகுதி IIIC மற்றும் ஸ்டாண்டர்ட் ஏவுகணை-6 ஆகிய அமெரிக்க ஏவுகணைகளை ஆஸ்திரேலியா வாங்குவதாக தெரிவித்துள்ளார்.
1945ம் ஆண்டில் நடந்த பனிப்போருக்குப் பிறகு, தற்போது மிகப்பெரிய ஆயுதப் போட்டி உருவாகி இருப்பதால், ஆஸ்திரேலியாவும் தனது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
அமெரிக்காவின் ஏவுகணைகள், நீண்ட தூர இலக்குகளைத் துல்லியமாக தாக்கியழிக்கும் திறன் கொண்டது என்றும் , கடல், தரை மற்றும் வான் ஆகிய 3 நிலைகளிலும், பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு திறனை வழங்கும் என்றும் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
உண்மையில், தென் சீனக் கடலுக்கு அருகில் இருக்கும் வடக்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ராணுவ தளங்களை மேம்படுத்தவே ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இணைந்துள்ளன.