யூ-டியூபர் இர்ஃபான் வருமானத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் பொது மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருந்து வருவதாக ஒருபுறம் விமர்சிக்கப்படும் நிலையில், சமூக வலைதளத்தில் சர்ச்சை வீடியோவை பதிவிடுவது, பிறகு அதனை நீக்கி மன்னிப்பு கேட்பது என அவருக்கு வாடிக்கையாகி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடுத்தடுத்து யூ-டியூபர் இர்ஃபான் சர்ச்சைக்குள் சிக்குவது ஏன்? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…..
புட் ரிவியுவர் இர்ஃபான், இர்ஃபான் வியூஸ் என்ற பெயரில் பல ஆண்டுகளாக யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார். இவரது youtube பக்கத்தை 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கிறார்கள். இதன் மூலம் இர்ஃபானுக்கு மாதத்திற்கு பல லட்சங்கள் வருமானம் குவிவதாகவும் கூறப்படுகிறது.
பிரபல யூ-டியூபர் இர்ஃபானுக்கு சில வருடங்களுக்கு முன்னரே திருமணம் நடந்தது. அவரது மனைவி கருவுற்ற நிலையில் வெளிநாட்டுக்குச் சென்று வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொண்டு, அதையும் வீடியோவாக கடந்த மே மாதம் இர்ஃபான் தனது youtube பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையான நிலையில், இர்ஃபான் மன்னிப்பு கேட்டு, அந்த வீடியோவை உடனடியாக நீக்கினார். தொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரையும் நேரில் சந்தித்து மன்னிப்பு கூறினார் இர்ஃபான்.
அப்போது தெரியாமல் செய்துவிட்டார் என மருத்துவத்துறை அசால்டாக விட்ட நிலையில் தற்போது மீண்டும் மற்றுமொரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் youtuber இர்ஃபான். கடந்த ஜூலை 24ஆம் தேதி யூடியூபர் இர்ஃபான் மனைவிக்கு சோழிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து குழந்தையை பார்க்க, மகப்பேறு பிரசவ அறைக்கு சென்ற இர்ஃபான், தாய்க்கும் குழந்தைக்கும் பாலமாக இருக்கும் தொப்புள் கொடியை எந்தவித அனுபவமும் இல்லாமல் தானே வெட்டி அதையும் youtubeபில் வீடியோவாக பதிவேற்றம் செய்திருந்தார்.
இந்த வீடியோவை இரண்டு தினங்களிலேயே 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்ட நிலையில், பொது மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக இந்த வீடியோ இருப்பதால், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் youtuber இர்ஃபான். மேலும், மருத்துவமனை நிர்வாகமும், பிரசவம் பார்த்த மருத்துவர்களும் இந்த செயலுக்கு எப்படி ஒப்புக் கொண்டார்கள் என்ற கேள்வியும் மருத்துவ வட்டாரங்களில் எழத் தொடங்கியது.
இந்நிலையில், வருமானத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் பொது மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக யூடியூபர் இர்ஃபான் செயல்பாடுவதாக கூறி அவர் மீது வழக்கு தொடர போவதாகவும் தெரிவிக்கிறார் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி..
இந்த நிலையில் தான் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வருவது போல இரண்டு தினங்களுக்கு முன்பு பதிவு செய்த வீடியோவை தனது youtube பக்கத்தில் இருந்து இர்ஃபான் நீக்கியுள்ளார். யூடியூபில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிடுவது, மீண்டும் அதை நீக்குவது இதுவே இர்ஃபானுக்கு வழக்கமான செயலாக மாறிவிட்டது. இம்முறையாவது ஏற்றத்தாழ்வு ஏதுமின்றி youtuber இர்ஃபான் செய்த தவறுக்கு தமிழக அரசு சார்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.