தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட செய்யும் உறுதியை, தீபாவளியின் தீப ஒளி வழங்கட்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர விடுத்துள்ள பதிவில், தீப ஒளித் திருநாள் என்று அனைவராலும் அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை, பாரத தேசம் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ராம பிரான், ராவணனை அழித்து தனது வனவாசத்தை முடித்து, அயோத்தி திரும்பிய நாளை தீபம் ஏற்றி தீபாவளி திருநாளாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை அழித்து தர்மத்தை நிலைநாட்டியதை நினைவுபடுத்தும் நாளாகவும் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்துக்கள் மட்டுமல்லாமல் சமணர்கள், சீக்கியர்களும் தீபாவளி பண்டிகையை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். பாரத தேசம் முழுவதும் கொண்டாடப்படும் இவ்விழா, அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது.
தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர்.
இந்த ஆண்டும் அதேச உற்சாகத்துடன் புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, மன மகிழ்ச்சியுடன் பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை நாம் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.
இந்தியாவில் தீபாவளி பண்டிகையாக மட்டுமல்லாமல் பொருளாதார பெருவிழாவாகவும் அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு நடைபெறும் வர்த்தகத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக தீபாவளி திகழ்கிறது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்து சேர்க்கிறது.
உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று நமது பாசமிகு பாரதப் திரு. நரேந்திர மோடி அவர்கள் அறிவுறுத்தி வருகிறார். தீபாவளி தருணத்தில் நமது பகுதி மக்கள் தயாரித்த ஆடைகள், இனிப்புகளை வாங்குவோம். நமது பெருமை மிகு சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வோம்.
இந்த நன்னாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் தீய சக்திகள் அழித்து நல்லாட்சி மலர்ந்திட செய்யும் உறுதியை, தீபாவளியின் தீப ஒளி நமக்கு வழங்கட்டும் என பிராத்திக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.