அரை மணிநேரத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வர வகைசெய்யும் எலான் மஸ்க்கின் STAR SHIP திட்டத்துக்கு, அதிபராக பதவியேற்றதும் ட்ரம்ப் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுதொடர்பான ஒரு செய்தி தொகுப்பு..!
ஒரு காலத்தில் தூர தேசங்களுக்குச் செல்ல கப்பல்களைத்தான் நம்பியிருக்க வேண்டும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல வாரக் கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட ஆகும். இருபதாம் நூற்றாண்டில் விமானங்கள் வந்த பிறகு பயண நேரம் ஒருசில நாட்களாகவும், சில மணி நேரங்களாகவும் மாறியது.
அதை மேலும் குறைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அவற்றில் ஒன்றே SPACE X நிறுவனர் எலான் மஸ்க்கின் STAR SHIP திட்டம். இதற்காக பெரிய SPACE CRAFT-ஐ அந்நிறுவனம் தயாரித்துள்ளது.
பொதுவாக பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்வதற்காகத்தான் SPACE CRAFT-ஐ பயன்படுத்துவார்கள். ஆனால் பூமிக்குள்ளேயே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதற்காக SPACE CRAFT-ஐ தயாரித்திருக்கிறார் மஸ்க். இதன்மூலம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் இருந்து கனடாவின் டொரண்டோவுக்கு 24 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்கிறார்கள். அதே போல் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கு வர 30 நிமிடங்களே ஆகுமாம். நியூயார்க் – லண்டன் இடையிலான பயண நேரம் 29 நிமிடங்களாகவும், நியூயார்க் – ஷாங்காய் இடையிலான பயண நேரம் 39 நிமிடங்களாகவும் குறையுமாம்.
STAR SHIP திட்டத்துக்கு அனுமதி பெற எலான் மஸ்க் முயன்று வரும் நிலையில், தேர்தலில் தாம் வெற்றி பெற உதவிய அவருக்கு ட்ரம்ப் ஆதரவுக்கரம் நீட்டுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க திறன் துறையை கவனிக்கும் பொறுப்புக்கு மஸ்க்கை தேர்வு செய்திருக்கும் ட்ரம்ப், அதிபரானதும் STAR SHIP திட்டத்துக்கு அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் SPACE CRAFT மேலே எழும்போதும், கீழே இறங்கும் போதும் புவி ஈர்ப்பு விசையால் பயணிகள் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுபற்றிய ஆய்வில் SPACE X நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே STAR SHIP திட்டம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், “இனி இது சாத்தியம்” என்று தெரிவித்துள்ளார்.