கார்த்திகை மாதம் மற்றும் விடுமுறை தினத்தையொட்டி, பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தற்போது சபரிமலை சீசன் என்பதாலும், அதிகாலை முதலே அடிவாரத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சுற்றுலா வாகனங்கள் மற்றும் பக்தர்கள் கூட்டமும் வழக்கத்தைவிட அதிகளவில் இருந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, பழனியில் உள்ள கிரி வீதி, சன்னதி வீதி மற்றும் அருள் ஜோதி வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.