ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, மின்சாதனங்களை பொது மக்கள் பயன்படுத்துவது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதையும், ஈரமான கைகளில் மின் சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களை இயக்குவதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் மின்சாரம் இல்லை என்றால், அருகில் உள்ள வீடுகளில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க கூடாது எனவும், சாலை மற்றும் தெருக்களில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின் ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மின் கம்பங்கள் மற்றும் மின்தடை குறித்து மாநகராட்சி மின்னகம், பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை மையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.