மதுரை பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, madurai.nic.in என்ற இணையதளம் மூலம் இன்று மாலை 5 மணி முதல் மாடுபிடி வீரர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மாவட்ட நிர்வாகம், காளைகள் ஏதாவது ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் தான் பங்கேற்க பதிவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
காளையின் உரிமையாளர் மற்றும் ஒரு பயிற்சியாளர் என இருவர் மட்டுமே வாடிவாசல் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் நாளை மாலை 5 மணிக்கு முன்பதிவு நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான வீரர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.