நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளருக்குப் பதவி உயர்வு வழங்காதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் ரவிச்சந்திரன் தனது பணி உயர்வு தொடர்பாகக் கடந்த 2024 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ரவிச்சந்திரனுக்கு பணி உயர்வு வழங்க உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து பல்கலைக்கழகம் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பல்கலைக்கழகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஆனாலும் இதுதொடர்பாக துணை வேந்தரோ பல்கலைக்கழகத்தின் பதிவாளரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் ரவிச்சந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளருக்குப் பதவி உயர்வு வழங்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியதோடு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.