திமுக எம்எல்ஏவின் மருத்துவமனையில் நிகழ்ந்த கிட்னி திருட்டு சம்பவத்தை முறைகேடு எனக் கூறி அரசு திசை திருப்புவதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அப்போது பேசிய அவர், அண்ணா, எம்ஜிஆர் பாணியில் திருச்சியில் இருந்து பிராசரத்தைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் முதல் பரப்புரையிலேயே அவர் பேச தொடங்கிய உடன் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக மைக்கில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் விஜய்யின் பேச்சை கேட்க ஆர்வமுடன் குவிந்திருந்த தவெக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து விஜய்யின் பேச்சு கேட்கவில்லை எனத் தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
இருப்பினும் தொடர்ந்து பேசிய அவர், 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து கேள்வி எழுப்பினார்.
சுய லாபத்திற்காகத் திமுக அரசு ஆறுகளில் மணல் அள்ளுவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும் திமுக எம்எல்ஏ நடத்தும் மருத்துவமனையில் கிட்னி திருட்டு சம்பவத்தை முறைகேடு எனக் கூறி அரசு திசைத் திருப்புவதாக விஜய் குற்றம்சாட்டினார்.