சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டதாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் சனாதனம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிய விவகாரம் தொடர்பாக டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா, உதயநிதியின் கருத்துக்கான பதிலைத்தான் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்துவிட்டதாக கூறினார்.
சனாதனம் ஒருபோதும் அழிந்துவிடாது என்பது மட்டும் உறுதி எனக்கூறிய அவர், நாட்டின் உயிர்த்துடிப்பும், ஆன்மாவும் சனாதனம் தான் என தெரிவித்தார்.
சனாதனம் ஒரு ஆலமரம் போன்றது என்றும், ஆண்டாண்டுகள் கடந்தாலும் அது கம்பீரமாக நிலைத்து நிற்கும் எனவும் குறிப்பிட்டார்.
சனாதனத்தின் வேர்கள் ஆழமாகவும், வலிமையாகவும் வேரூன்றி உள்ளன என்றும், அந்த மரம் என்றுமே புத்துணர்ச்சியாக தான் இருக்கும் எனவும் தத்தாத்ரேயா ஹொஸ்பேலா கூறினார்.
















