முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற தஞ்சை போலீசார், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான போலீசார் உதவியுடன் உதயநிதியை கைது செய்தனர். இது குறித்து தகவலறிந்த திமுக தொண்டர்கள் அவரது இல்லம் முன்பு திரண்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போலீசார் உதயநிதியை காவலில் எடுத்து தஞ்சை நோக்கி அழைத்துச் சென்றனர்.
சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், உதயநிதி கைது செய்யப்பட்டது ஜனநாயக விரோதம் என திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், உதயநிதி கைது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்தபோது, உதயநிதியை சிறையில் அடைக்கும் எண்ணம் இல்லை என்றும், விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி இளந்திரையன், விசாரணைக்குப் பிறகு உதயநிதியை உடனே விடுவிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
தஞ்சை தெற்கு காவல் நிலையத்துக்கு உதயநிதியை அழைத்துச் சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என கருதிய போலீசார், வழியிலிருந்த செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி தன்னை தஞ்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறிய உதயநிதி, செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்குள் செல்ல மறுத்து சிறிது நேரம் காரிலேயே அமர்ந்திருந்தார். பின்னர் காவல் நிலையத்துக்குள் சென்ற அவரிடம், ஆபாசப் பேச்சு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
மாலை 6.45 மணிக்கு காவல் நிலையத்துக்குள் சென்ற உதயநிதி, இரவு 8.10 மணிக்கு விசாரணை முடிந்து வெளியே வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள், அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் திறந்தவெளி காரில் நின்றபடி தொண்டர்களை நோக்கி கையசைத்த அவர், சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
















