தமிழ்நாட்டில் அரிசி விலை 25 முதல் 30 சதவிகிதம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 26 கிலோ பொன்னி அரிசி ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 95 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில், சுமார் 75 முதல் 80 லட்சம் டன் அரிசி தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகிறது.அதில் 10 லட்சம் டன் மோட்டா ரக அரிசி அண்டை மாநிலமான கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால் சுமார் 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் அரிசி அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக பொன்னி அரிசி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களில் அரிசி விலை சுமார் 25 முதல் 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இது கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது.
அதன்படி 4 மாதங்களுக்கு முன்பு ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ பொன்னி அரிசி ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
26 கிலோ சன்னரக அரிசி ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 25 கிலோ பிராண்டு பொன்னி அரிசி விலை ஆயிரத்து 450 முதல் ஆயிரத்து 550 வரை விற்பனை செய்யப்பட்டது.
அதேபோன்று கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆயிரத்து 450 முதல் இரண்டாயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்ட 30 கிலோ பாசுமதி அரிசி தற்போது ஆயிரத்து 950 முதல் மூவாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
நான்காயிரத்து 900-க்கு விற்பனை செய்யப்பட்ட 30 கிலோ சீரகச்சம்பா அரிசி தற்போது ஐந்தாயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரிசி விலை உயர்வுக்குக் காரணம் பருவமழை பற்றாக்குறை காரணமாக நெல் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பே என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
















