பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோர் இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
2008 மும்பை தாக்குதல் உட்பட இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் பாகிஸ்தானின் ஜெய்ஸ் -இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளார் என பாகிஸ்தான் அரசு கூறி வந்த நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மசூத் அசார் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது.
கடந்த 14ஆம் தேதி மசூத் அசார் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 70 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்த நிலையில், கடந்த 16-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோர் இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரகசிய சந்திப்பு தனியார் விருந்தினர் இல்லத்தில் இரண்டரை மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. ஒருபுறம் பயங்கரவாதிகளைத் தேடுவதாக பாகிஸ்தான் கூறும் நிலையில், மறுபுறம் ராணுவத் தளபதி முனீர்மசூத் அசாரை சந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல் அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
















