இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-1 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியா முக்கியமான மைல்கல்லை எட்டியது…
ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சிறிய செயற்கைக்கோள்களை புவி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட ‘விக்ரம்- 1’ என்ற ராக்கெட்டை தயாரித்தது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்தன. முற்பகல் 11.30 மணிக்கு ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 4 நிமிடங்கள் 59 வினாடிகளுக்கு முன்னதாக, கவுண்டவுண் நிறுத்தப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது காலதாமதமானது. இதனைத்தொடர்ந்து 35 நிமிடங்கள் தாமதமாக 12.05 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட், புவி ஈர்ப்பு விசையை கடந்து, திட்டமிட்டபடி தனது இலக்கு நோக்கி பயணம் செய்தது. பூமிக்கு மேலே சுமார் 450 கிலோ மீட்டர் உயரமுள்ள சுற்றுப்பாதையில் பல ஆய்வு கருவிகளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
இந்த ராக்கெட்டானது 350 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-1 ஏவப்பட்டதன் மூலம் தனியார் விண்வெளித் துறை ஒரு திருப்புமுனையான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இந்திய மண்ணிலிருந்து ஒரு இந்திய தனியார் நிறுவனம் விண்கலங்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முதல் முயற்சியே வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















