மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய, ரஷ்ய வர்த்தக, பொருளாதார அறிவியல், தொழில்நுட்ப, கலாச்சார கூட்டமைப்பின் 27-வது மாநாடு மாஸ்கோவில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மன்டுரோவுடன் இணைந்து இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். இருநாடுகளுக்கு இடையே 2021-22-ல் சுமார் 13 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகம், 2025-26-ல் கிட்டத்தட்ட 60 பில்லியன் டாலராக, அதாவது நான்கு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் இந்த வர்த்தக வளர்ச்சி ரஷ்யாவுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே காலகட்டத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 6.6 பில்லியன் டாலரிலிருந்து 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகவும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ள ஜெய்சங்கர், ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மன்டுரோவுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அதன்படி, இந்தியாவும் ரஷ்யாவும் 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தகத்தை இலக்காகக் கொண்டுள்ளன என்றும், அதை அடைவதற்கு இந்திய ஏற்றுமதிக்கான கட்டமைப்புத் தடைகளைச் சரிசெய்ய வேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக கடந்த திங்கட்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்துள்ளார்.
கிரெம்ளின் மாளிகையில் ஜெய்சங்கரை வரவேற்ற அதிபர் புதின், இருதரப்பு வர்த்தகம் மீண்டும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் வலுவடைவதற்குப் பிரதமர் மோடியின் தனிப்பட்ட கவனமே காரணம் என்று கூறிய ரஷ்ய அதிபர், பிரதமர் மோடிக்குத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறும் ஜெய்சங்கரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியைச் சந்திக்க ஆவலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள ரஷ்ய அதிபர் புதின், இந்திய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு தொடர்ந்து உரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே அணுசக்தி, உயர் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் பிற துறைகளிலும் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அதிபர் புதின் கூறியுள்ளார்.
2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியா-ரஷ்யா வர்த்தகம் 8 சதவீதம் அதிகரித்துள்ள
நிலையில் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, உரங்கள், அணுசக்தி, தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக விவசாய மற்றும் உணவுப் பொருட்கள், இயந்திரங்கள், உலோகங்கள் மற்றும் வனப் பொருட்களின் வர்த்தகம் விரிவடைந்து வருவதாகவும், அதே நேரத்தில் ரஷ்யாவிற்கான மருந்துகள், விவசாயப் பொருட்கள், தொழில்துறை மூலப்பொருட்கள், உபகரணங்கள், உதிரிபாகங்கள் மற்றும் இலகுரகத் தொழில்துறைப் பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் முன்மொழியப்பட்ட இந்தியா-யூரேசிய பொருளாதார ஒன்றியத்தின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை, இருதரப்பு வர்த்தகத்தின் ஒரு புதிய உந்துசக்தியாக கருதும் ரஷ்யா, இந்த ஒப்பந்தம் குறித்த தீவிரத் தயாரிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் அதிபர் புதினுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே நடைபெறவிருக்கும் சந்திப்புக்கு முன்னதாக இந்த தயாரிப்புகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
மேலும்,ரஷ்யாவுடன் மிகவும் சமச்சீரான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதார உறவை இந்தியா எதிர்பார்க்கும் நிலையில் இந்தியா-ரஷ்யா மூலோபாய கூட்டாண்மைக்கு இரு தரப்பினரும் தொடர்ந்து அளித்து வரும் அரசியல் முக்கியத்துவத்தை ஜெய்சங்கரின் பயணம் சுட்டிக்காட்டுகிறது.
















