சேலையை கழற்றிக் கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தார்கள் என நேபாள காட்டாற்று வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்த பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய திருச்சி உறையூரைச் சேர்ந்த சிவரஞ்சனி, தனது பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கைலாஷ் மானசரோவர் செல்வது தனது வாழ்நாள் கனவு என்றும், கடந்த 23-ம் தேதி கும்பகோணம் டிராவல்ஸ் மூலம் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
நேபாளத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென கரும்புகையுடன் வெள்ளம் பாய்ந்து வந்ததாகவும், தங்களது வாகனம் ஒரு வளைவில் நின்றதால் 21 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் கூறினார்.
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மேலேறியதாகவும், மயிலாடுதுறையைச் சேர்ந்த பூங்குழலி மற்றும் ரத்தினகுமார் ஆகியோர் பலரை மேலே ஏற்றி காப்பாற்றியதாகவும் தெரிவித்தார்.
மற்றவர்களை காப்பாற்ற தனது சேலையை கழற்றிக் கொடுத்த அவர்கள், தங்களுக்கு சிவன்-பார்வதியாகவே தெரிந்ததாக சிவரஞ்சனி நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், பேரிடர் காலங்களில் உடனடி உதவிக்காக மத்திய அரசு தனி அவசர எண்ணை அறிவிக்க வேண்டும் என்றும், டிராவல் ஏஜென்சிகளுக்கு உரிய நம்பகத்தன்மையை ஆய்வு செய்த பிறகே லைசன்ஸ் வழங்க வேண்டும் எனவும் சிவரஞ்சனி வலியுறுத்தினார்.
















