திமுக எம்.பி கனிமொழியை விமர்சனம் செய்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஈவெரா சிலை குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்டதாகவும், திமுக எம்.பி கனிமொழி குறித்தும் அவதூறாக பேசியதாகவும் அவர் மீது கடந்த 2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திராவிட அமைப்புகள் சார்பில் புகாரளிக்கப்பட்ட நிலையில் ஹெச்.ராஜா மீது இரு வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது.
மேலும் இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதங்கள் என ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன் ஈவெரா சிலை குறித்த ஹெச்.ராஜாவின் பதிவுகள் எந்த பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும். அவரின் பதிவால் சமூகத்தில் பதற்றம் ஏற்பட்டதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் கருத்து தெரிவித்தார்.
மேலும் சிறை தண்டனை என்ற சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.
















