சென்னை – கும்பகோணம் நான்கு வழிச்சாலை திட்டத்தில், விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு இடையிலான பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி, கும்பகோணம் செல்லும் சாலையை, நான்கு வழி சாலையாக மாற்றும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், சேத்தியாத்தோப்பு – சோழபுரம் – தஞ்சாவூர் வரையிலான சாலை பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு வரையிலான சாலை பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்துவிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள்ளோ அல்லது அதற்கு முன்பாகவோ சாலை அமைக்கும் பணிகளை முடிக்குமாறு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
















