பாகிஸ்தானின் பீல்டு மார்ஷல் அசிம் முனீர் பல்வேறு உலக நாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர்களால் வரவேற்கப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் தாயகம் திரும்புவது அவருக்கு ஒரு சிக்கலான விவகாரமாகவே அமைகிறது. உள்நாட்டில் பிரச்னைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதிகார உச்சத்துக்கு அசிம் முனீர் செல்வது அந்நாட்டுக்கு பெரும் ஆபத்தாகவே முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி பீல்டு மார்ஷல் ஜெனரல் சையத் அசிம் முனீர் முழு ராணுவ சீருடையில் ஹார்வர்ட் வணிகப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும் குழு புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான Inter-Services Public Relations இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விவரங்களை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் 9 நாடுகளைச் சேர்ந்த 44 ஹார்வர்ட் வணிகப் பள்ளி மாணவர்கள் அடங்கிய குழுவினருடன் அசிம் முனீர், பிராந்திய பாதுகாப்பு, கல்வி, தொழில்முனைவோர் மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்திகளை எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடியதாக கூறப்பட்டுள்ளது.
இது அசிம் முனீரின் உயர்வை உறுதிப்படுத்துவதுடன் அதிகாரத்தில் உள்ள அனைத்தின் மீதும் ஒரு மா மன்னரைப் போல அவர் ஆதிக்கம் செலுத்துவதையும், எடுத்துக் காட்டுகிறது. என்றாலும் இந்த பின்னணியில் கடுமையான கொந்தளிப்புகள் உள்ளதை மறுக்க முடியாது.
கடந்த சில ஆண்டுகளாகவே முழுவதும் போராட்ட மனநிலையில் இருக்கும் பாகிஸ்தானின் நிலைமை மேலும் மேலும் மோசமாகி வருகிறது.
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்துவரும் வரும் நிலையிலும் ஈரானுடனான பாகிஸ்தான் உறவு சுமுகமாக இல்லை. 2015-ல் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய ஈரான்-பாகிஸ்தான் எரிவாயு குழாய் திட்டம் முடங்கியுள்ளது. இது தொடர்பான குறித்தும் நடுவர் மன்ற விசாரணைகள் நிலுவையில் உள்ளன.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் மற்றும் ரெகோ டிக் (Reko Diq) சுரங்கத் திட்டம் என எந்தவொரு திட்டத்தின் காலக்கெடுவையும் பாகிஸ்தான் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை.
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலை வர்த்தகத் தடைகளை அமல்படுத்தியுள்ள அமெரிக்கா ஏற்கெனவே இந்தியாவின் நான்கு நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது.
முன்னதாக மூன்றாம் நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை பாகிஸ்தான் எல்லை வழியாக சாலை மார்க்கமாக ஈரானுக்குக் கொண்டு செல்ல புதிய ஆறு வழித்தடங்களை ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சகம் அறிவித்தது.
பாகிஸ்தான் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த மறுப்பு தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம் சுமார் 4.9 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக பெருகியுள்ள ‘சுழற்சி கடன்’ (circular debt) மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் நாட்டின் எரிவாயு விலையைக் குறைப்பதற்கான மத்திய அரசின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த IMF முயற்சி எடுத்துள்ளது.
சொகுசு பங்களாக்கள் மற்றும் எஸ்.யு.வி ரக வாகனங்கள் போன்ற சலுகைகளையும். ஓய்வுபெறும்போது முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள் பரிசாகக் கிடைப்பதையும் ராணுவம் அனுபவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் காவல்துறையினர் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ராணுவத்தின் இருப்பு தங்களைப் பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்குப் பதிலாக, இன்னும் அதிக ஆபத்துக்குள்ளாக்குவதாக கைபர் பக்துன்க்வா காவல்துறையினர் நீண்டகாலமாகப் புகார் கூறி வரும் நிலையில் ‘காவல்துறை அமைதிக் குழு’ என்ற பெயரில் காவல் துறையினர் அரசுக்கும் அசிம் முனீருக்கும் எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது போதாதென்று, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விவகாரம், அசிம் முனிருக்கு ஒரு பலவீனமான புள்ளியாகவே மாறியுள்ளது.
சிறையில் இம்ரான் கான் இறந்தாலும் நாடு தழுவிய கலவரங்கள் வன்முறைகள் நடக்கும் என்றும் உயிரோடு விடுதலையானாலும் அசிம் முனீருக்கு பெரும் தலைவலியாக மாறுவார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், PTI கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகியுள்ளது. டாக்டர் யாஸ்மின் ரஷித் மற்றும் ஷா மஹ்மூத் குரேஷி போன்ற முக்கியத் தலைவர்களைத் தவிர, கடந்த ஓராண்டில் மட்டும் 108 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முக்கியத் தலைவர்கள் முதல் சாதாரணத் தொண்டர்கள் வரை அனைவரையும் சிறையில் அடைக்கும் அசிம் முனீர் கொள்கையில் மொத்தம் எத்தனை PTI உறுப்பினர்கள் சிறையில் உள்ளனர் என்பது குறித்த துல்லியமான விவரம் யாருக்கும் தெரியாமலேயே உள்ளது.
இந்நிலையில் மூப்புப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த Lt Gen Aamer Razaவுக்கு திடீரென ஐந்து அந்தஸ்து நட்சத்திரம் வழங்கப்பட்டு பாகிஸ்தானின் புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய உத்திசார் கட்டளைப் பிரிவின் முதல் தளபதியாக நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நவம்பருக்குப் பிறகும் இராணுவத் தலைமை தளபதியாக அசிம் முனீர் தொடர்ந்தால் நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பதவி நீட்டிப்புக்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதால், பதவி உயர்வு பெற விரும்புவோருக்காக இராணுவத்தில் அதிகப் பதவிகளை உருவாக்கி வருகிறார் அசிம் முனீர். இதன் மூலம் நாட்டில் மறைமுகமான ஒரு இராணுவ ஆட்சியையே அசிம் முனீர் கட்டமைத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
எவ்வளவு அதிகமாக வீழ்ச்சியடைகிறாரோ, அவ்வளவு அதிகமாக இந்தியாவைப் போருக்குத் தூண்டுவதற்கும் அசிம் முனீர் தயங்க மாட்டார் என்றே சர்வதேச புவிசார் அரசியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தானின் எதிர்காலம் அசிம் முனீரின் பிடியில் சிக்கி இருப்பது அந்நாட்டின் துரதிஷ்டம் என்றே அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
















