தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தின் விளம்பரத்திற்காக திருப்பதி லட்டை பயன்படுத்திய நபர் குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தை லைக் மற்றும் ஷேர் செய்பவர்களுக்கு திருப்பதி லட்டு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். எத்தனை முறை ஷேர் செய்கிறீர்களோ, அத்தனை முறை லட்டு வழங்கப்படும் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தனது ஃபேஸ்புக் பக்கத்தை 30 முறை ஷேர் செய்த நபருக்கு 30 லட்டுகளை அவர் வழங்கினார். அது குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்திருந்தார்.
திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் 2 லட்டுகள் வாங்கவே நீண்ட நேரம் காத்திக்க வேண்டிய சூழல் உள்ள நிலையில், இந்த நபருக்கு எப்படி ஒரே நேரத்தில் இத்தனை லட்டுகள் கிடைக்கின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில் தேவஸ்தான ஊழியர்கள் அல்லது இடைத்தரகர்கள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
















