அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்களின் ராஜினாமாவை தவிர்க்க, அவர்களுக்கான சலுகைகள் மற்றும் ஓய்வூதிய உதவிகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசியலமைப்பு சார்ந்த பதவியில் உள்ளவர்கள், பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், அவர்களுக்கான அனைத்து விதமான சலுகைகளையும் ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பிரதிக் வீரா என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், அரசியலமைப்பு சாராத பதவி வகிப்பவர்கள் மீது, துறைரீதியான விசாரணையோ, பதவி நீக்க நடவடிக்கையோ நிலுவையில் இருந்தால், அவர்கள் ராஜினாமா செய்ய சட்டத்தில் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவர்களை விட மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அரசியலமைப்பு நிர்வாகிகள் மட்டும் விசாரணைக்கு பயந்து, எளிதாக ராஜினாமா செய்துவிட்டு தப்பிப்பது நியாயமற்றது என கூறப்பட்டது.
பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யாமல், பதவி நீக்கத்திற்கு பயந்து, பாதியிலேயே விலகும் நபர்களுக்கு முழு சலுகைகளையும் வழங்கும் விதிகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதையடுத்து, மனு மீது விரிவான அறிக்கை அளிக்குமாறு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















