1901-க்குப் பிறகு மிக வெப்பமான ஆகஸ்ட் மாதத்தைச் சந்தித்துள்ள இந்தியாவில் 741 மாவட்டங்களில் 47 சதவீதத்திற்கும் அதிகமான மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான மழையே பெய்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த மழைப் பற்றாக்குறை சுமார் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. அரபிக் கடலில் இந்த மாற்றங்கள் ஏற்பட என்ன காரணம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தென்மேற்கு பருவமழையே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் மற்றும் நீர்வளத்துக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.
வழக்கத்திற்கு மாறாக பருவமழைக் காலத்தின் பெரும்பகுதி அரபிக்கடல்அமைதியாக இருந்துள்ளது. இதுவே பருவமழைக் குறைவுக்கு காரணமாக சொல்லப் படுகிறது.
சாதாரண பருவமழைக் காலங்களில், வெப்பமான மற்றும் ஈரப்பதமான காற்று வெப்பமண்டல இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பிலிருந்து மேலே எழும்புகிறது. அது மேலே சென்று குளிர்ச்சியடையும் போது, நீராவி குளிர்ந்து மேகங்களாக மாறுகிறது. அவற்றில் சில மேகங்கள் கனமழையைத் தரக்கூடிய பெரிய அமைப்புகளாக வளர்கின்றன. ‘லோ-லெவல் ஜெட்’ (low-level jet) என்று அழைக்கப்படும் வலுவான தென்மேற்கு காற்று மண்டலம், ஈரப்பதத்தை சுமந்து கொண்டு அரபிக்கடல் வழியாக இந்தியாவை நோக்கி வீசுகிறது.
இந்த ஆண்டு, வீசிய வறண்ட காற்று, ஆழமான மேகங்கள் உருவாகத் தேவையான வெப்பமான, ஈரப்பதமான காற்றின் மேல்நோக்கிய இயக்கமான வெப்பச்சலனத்தை அடக்கி வளிமண்டலத்தில் மழைப் பொழிவுக்கான வளர்ச்சியை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதனால் பருவமழை சுழற்சியும் கூட இயல்பை விட பலவீனமாகியுள்ளது.
நாட்டின் ஆண்டு மழையளவில் சுமார் 70 சதவீதத்தை வழங்கும் இந்த பருவமழை,
பருவம் முழுவதும் சீராகப் பெய்யாமல், குறைந்த நாட்களில் தீவிரமாக பெய்யும்போது, சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கையும் மற்ற பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது.
உதாரணமாக அரபிக்கடலின் இந்தப் பலவீனமான செயல்பாட்டினால் கோவா, சிந்துதுர்க், கடலோர கர்நாடகாவின் பெரும்பகுதிகள் மற்றும் சௌராஷ்டிராவின் துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர் மற்றும் கட்ச் போன்ற பகுதிகளில் பருவமழை பொய்த்துள்ளது.
மேற்கு கடற்கரையோரம் கனமழையைத் தரும் வகையிலான ‘கடல்சார் தாழ்வு மண்டலப் பகுதி’ மிகச் சில முறை மட்டுமே செயல்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விதிவிலக்காக கடந்த ஜூலை மாதத்தில் கடல்சார் தாழ்வு மண்டலப் பகுதி மற்றும் பால்கர் (Palghar) பகுதிக்கு மேல் உருவான சுழற்சியால் கொங்கன், தெற்கு குஜராத் மற்றும் மேற்கு மகாராஷ்டிரா பகுதிகளில் சுமார் ஐந்து நாட்களில் ஒரு மாதத்திற்கான மழைப்பொழிவை ஒரே நேரத்தில் கொட்டித் தீர்த்துள்ளன.
இந்நிலையில் தீவிரமடைந்த எல் நினோ மற்றும் இயல்பை விட அதிகமான வெப்பநிலை காரணமாக வரும் செப்டம்பரில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஆனாலும் மழைப் பற்றாக்குறை என்பதற்குப் பதிலாக சராசரிக்கும் கீழே மழைப் பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















