சென்னையிலுள்ள ராணுவ அகாடமியில் இளம் அதிகாரிகளின் தீரச்செயல் நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னையிலுள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில், நாளை தங்களது பயிற்சியை நிறைவு செய்யவுள்ள அதிகாரிகள், தீரச்செயல் திறன்களை செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இளம் ராணுவ அதிகாரிகள், தங்கள் உடல் தகுதித் திறன்களை வெளிப்படுத்தினர். அகாடமியின் பயிற்சி அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்ற விறுவிறுப்பான குதிரையேற்ற சாகச நிகழ்ச்சி, குதிரைகளுக்கும் சவாரி செய்பவர்களுக்கும் இடையிலான அற்புதமான இணக்கத்தை வெளிப்படுத்தியது. குதிரைகளின் துல்லியமான அசைவுகள் மற்றும் சுறுசுறுப்பான இயக்கத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இதனைத் தொடர்ந்து, நடனம், தற்காப்பு, இசை, உடல் வளைந்து கொடுக்கும் திறன் ஆகியவற்றின் இணக்கமான கலவையான ‘களரிப்பயிற்று’ தற்காப்புக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியாக பயிற்சி அதிகாரிகளின் மன உறுதி மற்றும் திறனை வெளிப்படுத்தும் வகையிலான பதுங்கு குழி தகர்ப்பு பயிற்சி நடைபெற்றது.
















