பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு, திருக்குறளின் ரஷ்ய மொழிப்பெயர்ப்பு நூலை பிரதமர் மோடி பரிசாக வழங்கி கவுரவித்தார்.
டெல்லியில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷ்ய அதிபர் புதின் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் புதின் சந்தித்தார். அப்போது புதினை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றதுடன், உலகப் பொதுமறையான
திருக்குறளின் ரஷ்ய மொழிப்பெயர்ப்பு நூலை அதிபர் புதினுக்கு பரிசாக வழங்கி கவுரவித்தார்.
பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு நல்லுறவு மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியா – ரஷ்யா இருதரப்பு வர்த்தகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்ய சந்தையில் இந்திய பொருட்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. கடந்த 11 நாட்களில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் 2வது முறையாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
















