தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தேனி மாவட்டம், கண்டமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடரும் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கண்டமனூர், கணேசபுரம், வேலாயுதபுரம், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் விட்டு விட்டு 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மின்தடை பிரச்னையை உடனடியாக சரிசெய்யாவிட்டால், கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் தொடர் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அய்யர்மலை, பணிக்கம்பட்டி, நச்சலூர், கொசூர், பஞ்சப்பட்டி, வல்லம், மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு நேரங்களில் 4 முதல் 6 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மின்வெட்டு நீடிப்பதால், பள்ளி மாணவர்கள் செல்போன் வெளிச்சத்தில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் தொடர் மின்வெட்டால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர்.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைவிளைப்பட்டி, தெற்கு அகஸ்தியர்புரம், உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்படும் மின்தடையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலை அடிவாரப் பகுதியாக இருப்பதால், இரவு நேரங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், மின்வெட்டால் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மின்வாரியத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
















