செப் 17ம் தேதி நடைபெறும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவின் போது கட்டிட மேற்கூரைகளில் பக்தர்கள் ஏற மதுரை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள்ளாக நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை காண்பதற்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை, மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி உள்ளிட்ட அரசுத் துறைகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கும்பாபிஷேக தினத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொதுமக்கள் மேற்கூரையில் ஏறுவதற்கு அனுமதிக்க கூடாது என மாநகராட்சி நிர்வாகம் கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுற்றி உள்ள சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பு, மின்சார கம்பிகள் வழித்தடம் மற்றும் கட்டிடங்களின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலை சுற்றி மூன்று அடுக்குகளாக உள்ள சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள் உள்ளிட்ட வீதிகளில் கட்டடங்களில் பொதுமக்களை அனுமதிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் நூறு ஆண்டுகளை கடந்த பழமையான கட்டடங்களும் உள்ளதை மாநகராட்சி கண்டறிந்து கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
















