விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையால் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி என தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிகளவில் விமானங்களை நாடி வருகின்றனர்.
இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதுடன், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கான விமானக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன.
சென்னை-மதுரை வழித்தடத்தில் வழக்கமாக 5 ஆயிரத்து 393 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 19 ஆயிரத்து 761 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சென்னை-பெங்களூரு பயணக் கட்டணம் 3 ஆயிரத்து 801 ரூபாயிலிருந்து 17 ஆயிரத்து 993 ரூபாயாகவும், சென்னை-டெல்லி பயணக் கட்டணம் 8 ஆயிரத்து 943 ரூபாயிலிருந்து 31 ஆயிரத்து 47 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
பல மடங்கு கட்டண உயர்வால் பயணிகள் அதிருப்தியடைந்தாலும், விடுமுறையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றனர்.
















