மதுரை திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை உள்ளது என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, மத்திய தொல்லியல்துறையுடன் இணைந்து வருவாய்த்துறை மூலம் திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு மீண்டும் விசாரித்தபோது, மொத்த மலையையும் அளவிட வாய்ப்பில்லை என்று அறநிலையத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
மனுதாரர் கோரியுள்ள நிவாரணத்திற்கு அப்பால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும்,அறநிலையத்துறை தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, கோவிலின் நலன் கருதி அதன் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் உத்தரவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம், கோவில், தர்கா, தொல்லியல்துறை சம்பந்தப்பட்டது என்றும்,இதில், அறநிலையத்துறைக்கு என்ன வேலை உள்ளது என்றும் கேள்வி எழுப்பினர்.
அறநிலையத்துறை தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்த நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
















