உண்மையான எதிர்க்கட்சி இல்லாத நிலையில் அதிபர் புதினின் ‘யுனைடெட் ரஷ்யா’ (United Russia) கட்சி எளிதாக முழுமையான வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள கிரெம்ளின் மாளிகை மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பல ஆண்டுகளாகவே, ரஷ்யாவின் தாராளவாத மற்றும் போர் எதிர்ப்பு எதிர்க்கட்சியான ‘யாப்லோகோ’ (Yabloko) ‘உட்பட பிற சிறிய எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ரஷ்யாவில் அனுமதி இருந்து வந்தது.
பல்வேறு அரசியல் கருத்துகளுடன் கூடிய பல கட்சி ஜனநாயகம் ரஷ்யாவில் உள்ளது என்பதற்கு இதுவே சான்றாக இருந்தது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை பகிரங்கமாக எதிர்த்து வந்த ஒரே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான யாப்லோகோ கட்சியை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அதிகாரப்பூர்வமாக ரஷ்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது
கிரெம்ளின் ஆதரவு பெற்ற ‘ரோதினா’ (Rodina) மற்றும் ‘மதர்லேண்ட்’ போன்ற தேசியவாத அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட்டில் இக்கட்சியின் தேர்தல் பதிவை ரத்து செய்த ரஷ்ய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து யாப்லோகோ கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டு தடை உறுதி செய்யப்பட்டது.
இத்தீர்ப்பு வெளியான அதே நாளில், யாப்லோகோ கட்சியின் துணைத் தலைவரான லெவ் ஷ்லோஸ்பெர்க்-க்கு (Lev Shlosberg), ரஷ்ய ராணுவத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் தவறான பொய்த் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டுகளுக்காக 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.
உக்ரைன் மீதான போர் தொடங்கிய பிறகு நடக்கும் முதல் ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்பு எதிர்கட்சிக்குத் தடை விதித்து ரஷ்யாவில் போரை எதிர்க்கும் மாற்று அரசியல் குரல்கள் முற்றிலும் முடக்கப் பட்டது.
அதிகரிக்கும் போர்ச் செலவுகள் குறித்த அதிகாரிகளின் எச்சரிக்கை, முடிவில்லாத உக்ரைன் போரைத் தாங்கும் வலிமை பொருளாதாரத்திற்கு இல்லை என்று சுட்டிக்காட்டும் ரஷ்ய வங்கி மற்றும் நிதித் துறையின் அறிக்கை என சமூக ஊடகப் பிரபலங்கள் முதல் சாதாரண குடிமக்கள் வரை தங்கள் அதிருப்தியை , வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஏப்ரல் மாதத்திற்குள்ளேயே 5.9 டிரில்லியன் ரூபிள் பற்றாக்குறையை ரஷ்யா சந்தித்துள்ளது. இது முழு ஆண்டுக்கும் திட்டமிடப்பட்ட 3.8 டிரில்லியன் ரூபிள் பற்றாக்குறையை விட மிக அதிகம் ஆகும்.
ஏற்கெனவே மொத்த பட்ஜெட்டில் 40 சதவீதம் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 3 டிரில்லியன் ரூபிள் நிதியை அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கோரிக்கை வைத்திருந்தது.
கடந்த ஜூனில் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து கிரெம்ளின் பயன்படுத்தி வரும் அவசரகால நிதி முடிவில்லாதது அல்ல என்றும், பொதுச் செலவினங்களில் குறிப்பிட்ட அளவு கட்டுப்பாடு தேவை என்றும் ரஷ்ய நிதியமைச்சர் அன்டன் சிலுவானோவ் வெளிப்படையாகவே வேண்டுகோள் வைத்திருந்தார்.
உக்ரைன் விரைவில் வீழ்ச்சியடையும் என்ற கணிப்புகள் தவறானவை என்று கூறிய அரசுக்குச் சொந்தமான VEB.RF வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆண்ட்ரி க்ளெபாக், மேற்கத்திய நாடுகளுடனான நீண்ட காலப் போரில் ரஷ்யா தோல்வியடையும் என்று எச்சரித்திருந்தார்.
இவை எதுவும் அதிபர் புதினின் செல்வாக்கை பலவீனமடைய செய்யவில்லை. உக்ரைன் போரில் அவரது ஆட்சி அதிகாரத்தை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே நடந்து முடிந்த தேர்தலில் புதினின் கட்சி முழுமையான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ரஷ்ய அதிபரிடம் நல்ல தேர்வுகள் எதுவும் இல்லை என்றும், மோசமான மற்றும் மிக மோசமான நடவடிக்கைகளுக்கு இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலையிலேயே புதின் உள்ளார் என்றும் எஸ்தோனிய உளவுத்துறையின் தலைவர் கவுபோ ரோசின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போரை நிறுத்துவது தன்னை ஒரு பலவீனமான நபராகச் சித்தரிக்கும் என்பதால் போரைத் தொடரும் புதினின் முடிவுகளால் நாட்டில் உள்நாட்டுப் பிரச்சினைகளும் பதற்றங்களும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாக புதின் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அபாயங்களைக் கொண்டதாகவே உள்ளதாகவும், உள்நாட்டு அதிகாரத்தை வலுப்படுத்தும் ஒரே கருவியாகவே புதின் உக்ரைன் போர் மாற்றியுள்ளதாகவும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு முரண்பாடான சூழலில் சிக்கியுள்ள ரஷ்யாவுக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது.
மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ள ரஷ்ய அதிபர் புதின், வீசும் வாள் எந்தப் பக்கம் சாய்கிறது என்பது ரஷ்யாவுக்கு மட்டுமல்ல, ஐரோப்பாவின் எதிர்காலத்திற்கும் மிக முக்கியமானதாக உள்ளது.
















