குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, போதிய நிபந்தனைகளுடன் பாஸ்போர்ட் புதுப்பிக்க அனுமதிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன், தனது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, பாஸ்போர்ட் புதுப்பிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து மணிகண்டன் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் மீதான வழக்கில் கீரனூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பாஸ்போர்ட் புதுப்பிக்க அனுமதி கோரி மனுதாரர் விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், அந்த மனுவை மூன்று வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், வெளிநாடு செல்வது குடிமகனின் அடிப்படை உரிமை என்றும், அதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் அவரது தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
அதேவேளையில், குற்ற வழக்கு விசாரணை பாதிக்கப்படாமல் இருக்க, பாஸ்போர்ட்டின் காலத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட போதிய நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றம் விதிக்கலாம் என்றும், அந்த நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரி உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
















