சேலத்தில் பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் விடுதியில் காவலில் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் போதை ஒழிப்பு மற்றும் இளைஞர்கள் மீட்பு பிரசாரத்திற்காகத் தமிழகம் முழுவதும் பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தில், கடந்த வெள்ளிக்கிழமை சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை மேற்கொண்டபோது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து, பிரசாரம் செய்ய விடாமல் தடுத்து தாக்க முயன்றதாக வேலூர் இப்ராஹிம் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், இன்று மீண்டும் அதே பள்ளிவாசலில் தொழுகை நடத்தப் போவதாக அவர் அறிவித்திருந்தார். இதனை அடுத்து, அவர் தங்கியிருந்த தனியார் விடுதியிலேயே போலீசார் தடுத்து வைத்து வெளியே செல்ல அனுமதி மறுத்தனர். இதையடுத்து விடுதி வாசலிலேயே தொழுகை மேற்கொண்டார்.
















