சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமைச்சரோ, அதிகாரிகளோ மாற்ற முயன்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் எதிரே 6 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்டும் திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வனத்துறை நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்குவதை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்தனர்.
நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் பட்டா வழங்கப்படும் என அமைச்சர் ஒருவர் எந்தத் தைரியத்தில் பேசினார் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டியது அரசின் கடமை என சுட்டிக்காட்டினர்.
சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும், நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அரசிடம் எடுத்துரைக்க அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
















