உக்ரைனின் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காக ரஷ்ய அதிபர் புதினின் வால்டாய் மாளிகையைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு கோபுர அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உக்ரைன் இராணுவம் ரஷ்யாவின் எல்லைகளுக்குள் ஆழமாக ஊடுருவி, ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூரம் பாயும் அதிநவீன ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த டிசம்பரில் அதிபர் புதினின் வால்டாய் மாளிகையை குறிவைத்து 90-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல்கள் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.
உக்ரைன் ஏவிய ட்ரோன்கள் ஒவ்வொன்றும் சுமார் 6 கிலோ எடையுள்ள WAR HEADS கொண்டிருந்ததாகவும், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவை அனைத்தையும் இடைமறித்ததாகவும், அதனால் எந்த உயிரிழப்போ சேதமோ ஏற்படவில்லை என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ரஷ்யாவின் இந்தக் குற்றச்சாட்டை உடனடியாக மறுத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இது ஒரு பொய் என்றும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைப்பதற்கான தந்திரம் என்றும் கூறியிருந்தார்.
அதனையடுத்து உக்ரைன் இராணுவத்தின் வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து அதிபரின் வால்டாய் மாளிகையைப் பாதுகாக்கவே அதைச் சுற்றி 50 கிலோமீட்டர் சுற்றளவில் 50-க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் Novgorod Oblast பகுதியில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் மாஸ்கோ ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கு இடையே, அழகிய வால்டாய் ஏரியின் கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிறிய நகரம்தான் வால்டாய் ஆகும்.
ரஷ்யாவின் மிக நீளமான வோல்கா நதி உட்பட பல முக்கிய நதிகள் உற்பத்தியாகும் வால்டாய் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்நகரில் சுமார் 13,600 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
2023-ஆம் ஆண்டு ஜனவரியில் அதிபர் புதினின் வால்டாய் மாளிகைக்கு அருகில் முதன்முதலாக Pantsir-S1 வான் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டது. Pantsir-S1 என்பது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட ஒரு துப்பாக்கி மற்றும் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பாகும்.
தொடர்ந்து 2024-ல் இரண்டாவது வான் பாதுகாப்பு அமைப்பு நிறுவப் பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வால்டாய் மாளிகையைச் சுற்றியுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது.அதன் பின்னர் பாதுகாப்பு கட்டமைப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, அமைப்புகளின் எண்ணிக்கை 20-யைத் தொட்டது. தொடர்ந்து கடந்த மார்ச்சில் புதிதாக ஏழு Pantsir-S1 வான் பாதுகாப்பு அமைப்புகள் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
சுமார் 2 கோடி மக்கள் வசிக்கும் தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு கோபுரங்கள் உள்ளன.
ஆனால், 100,000-க்கும் குறைவான மக்களே வாழும் வால்டாய் பகுதியில் அதிபர் புதினின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள எண்ணிக்கையை விட சுமார் இரு மடங்கு அதிகமாக சுமார் 50-க்கும் அதிகமான வான் பாதுகாப்பு அமைப்புக்களுடன் கூடிய கோபுரங்கள் நிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதிபர் புதின் பயன்படுத்தும் ஒரு இராணுவ விமானத்தளம், மாளிகையுடனான இரயில் இணைப்பு மற்றும் அருகில் ஆய்வக வளாகம் ஆகியவை இருப்பதாகக் கூறப்படுவதால், விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு வளையம் அதிபர் இல்லத்தைவிட அதிகமான பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
2000ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் அதிபர் புதின், சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு, ரஷ்ய அதிபர்களுள் நீண்ட காலம் பதவி வகித்த பெருமையுடன் உள்ளார். .
ஐந்தாவது முறையாக அதிபர் பதவியில் இருக்கும் சுமார் 73 வயதாகும் அதிபர் புதின் வரும் 2036ஆம் ஆண்டு வரை கூட ஆட்சியில் நீடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறப் படுகிறது.
சொல்லப்போனால் அதிபர் புதினின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, 24 மணி நேரமும் அவருடன் இருக்கும் நூற்றுக்கணக்கான மெய்க்காப்பாளர்கள் அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
















