பிற மத அடையாளங்களை வெளிப்படையாக அணிந்தோரையும், இந்து கடவுள் மீது தங்களுக்கு மரியாதை உண்டு என்பதை உறுதிப்படுத்தாதோரையும் கோயில் வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்து மதத்தைச் சாராதோர் கோயிலின் கருவறை மற்றும் மண்டபங்களுக்குள் நுழைவதைத் தடுக்க கோரி இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் தங்கம் வெங்கடேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து கோயில்களில் வழிபடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு வழிவகை செய்துள்ளதாகவும், ஆகமக் கோயில்களின் கருவறைக்குள் அர்ச்சகர்களைத் தவிர மற்றவர்கள் நுழைய அனுமதி இல்லை எனவும் தெரிவித்தனர்.
கோயிலுக்கு வரும் நபர் பிராமணராக இருந்தாலும், கருவறையின் நுழைவாயில் வரை மட்டுமே செல்ல முடியும் என்றும், அனைத்து சமூகத்தினருக்கும் இந்த விதிமுறை ஒரே மாதிரியாகப் பொருந்தும் எனவும் குறிப்பிட்டனர்.
கோயில் வளாகத்துக்குள் நுழைவோர் அங்குள்ள மத நடைமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி, கோயில் நிர்வாக அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் இந்து மதத்தைப் பின்பற்றுவோராக இருக்க வேண்டும் என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், பிற மத அடையாளங்களை வெளிப்படையாக அணிந்திருப்போரும், இந்துக் கடவுள் மீது மரியாதை இருப்பதை உறுதிப்படுத்தாதோரும் கோயில் வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெளிவுபடுத்தினர்.
















