ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, ரயிலில் பட்டாசுகளை எடுத்து செல்வதில் உள்ள ஆபத்துக்களை எடுத்துரைக்கும் வகையிலும், பட்டாசுகளை எடுத்து சென்றால் அளிக்கப்படும் தண்டனை குறித்தும் பயணிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
ரயிலில் பட்டாசுகளைக் கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் குப்பைகளைத் தொட்டியில் போடுவது, பயணச்சீட்டுடன் பயணிப்பது உள்ளிட்டவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எம்ஜிஆர், ரஜினி உள்ளிட்டோர் வேடங்களிலும், நாடக வடிவிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய ரயில்வே பாதுகாப்பு படையினர்,
ரயில்வே விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தினர்.
















