தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் நடப்பாண்டு 30 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையின் முன்பும் தீயணைப்பான், மணல் நிரப்பப்பட்ட வாளி மற்றும் 200 லிட்டர் தண்ணீர் வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணியில் 14 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டு தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கு 200 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வகையான பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. வான வெடிகள், புஸ்வானம், சரவெடி, சங்கு சக்கரம், ராக்கெட் உள்ளிட்ட பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் தீவுத்திடல் கொண்டாட்டக் களமாக மாறியுள்ளது.
















