அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பெற்றுள்ள வெற்றி, அந்நாட்டின் அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை, மருத்துவக் காப்பீடு என சாமானிய மக்களின் அன்றாடப் பிரச்னைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்த ஜனநாயக கட்சியால், தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியுமா என்பதை ஆராய்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு….
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. குடியரசுக் கட்சியின் வசமிருந்த பல தொகுதிகளைக் கைப்பற்றியதுடன், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரண்டு அவைகளிலும் பெரும்பான்மைப் பெறும் நிலையை எட்டியுள்ளது.
இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது, அமெரிக்க மக்களை நேரடியாகப் பாதிக்கும் விலைவாசி உயர்வு!
டெக்சாஸ் முதல் இந்தியானா வரை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள், உணவுப் பொருட்கள், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியச் செலவுகள் அதிகரித்திருப்பதைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக முன்வைத்தனர்.
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அமெரிக்கப் பொருளாதாரம் வலிமையானதாக தெரிந்தாலும், அமெரிக்காவின் தற்போதைய போக்கு குறித்து திருப்தி தெரிவித்த மக்களின் எண்ணிக்கை வெறும் 21 சதவீதம் மட்டுமே என்கிறது ஒரு ஆய்வு! மக்களின் இந்த மனநிலையைப் புரிந்துகொண்ட ஜனநாயகக் கட்சியினர், ‘வாழ்க்கைச் செலவுகளை குறைப்போம்’ என்ற முழக்கத்துடன் தேர்தலில் களமிறங்கினர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளால் உணவுப் பொருட்கள், உரங்கள், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வதாகக் கூறும் ஜனநாயகக் கட்சியினர், அந்த வரிகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இந்தப் போர் காரணமாக பெட்ரோல் விலை கேலனுக்கு 4 டாலர் 18 சென்ட்களாக உயர்ந்துள்ளதாகவும், ஏறக்குறைய 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அடுத்ததாக, அடுத்த 10 ஆண்டுகளில் 40 லட்சம் வீடுகளைக் கட்டுவது, கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி விதிப்பது, குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வரிச் சலுகைகளை அதிகரிப்பது எனப் பல்வேறு வாக்குறுதிகளையும் முன்வைத்துள்ளனர்.
இரு அவைகளிலும் பெரும்பான்மை கிடைத்தாலும், அமெரிக்க அதிபரின் அதிகாரம் ஜனநாயகக் கட்சியினருக்குப் பெரும் தடையாக இருக்கும். அவர்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு அதிபர் ட்ரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முட்டுக்கட்டை போட முடியும்.
அதிபரின் வீட்டோ அதிகாரத்தை முறியடிக்க இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. எனவே, குடியரசுக் கட்சியினரின் ஆதரவு இல்லாமல் பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்துவது கடினம்.
இறக்குமதி வரிகளைக் குறைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. அமெரிக்க அரசின் மொத்த வருவாயில் இறக்குமதி வரிகளின் பங்கு கடந்த 2024-ல் ஒரு சதவீதத்துக்கும் சற்று அதிகமாக இருந்த நிலையில், தற்போது 5 சதவீதத்தைக் கடந்துள்ளது. இதனால் இந்த வரிகளைக் குறைப்பதில் ட்ரம்ப் நிர்வாகம் தயக்கம் காட்டலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மின்சாரக் கட்டணம், வீட்டு வசதி போன்ற விவகாரங்களில் மாகாண அரசுகளுக்கும் அதிகாரம் இருப்பதால், ஜனநாயக கட்சி வெற்றி பெற்ற மாகாணங்களில் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் வாய்ப்புள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியினருக்கு இப்போது இரட்டைச் சவால் காத்திருக்கிறது. ஒருபுறம் ட்ரம்ப் நிர்வாகத்தின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டும்… மறுபுறம் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்போம் என்ற வாக்குறுதி தேர்தல் வெற்றியைத் தேடித்தந்துவிட்டது. ஆனால், அந்த வாக்குறுதி நிஜமாகுமா என்பதுதான் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க அரசியலின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கப்போகிறது….
















