துணை சபாநாயகர் ரவிசங்கர், தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது உண்மைதான் என்றும், குடும்பத்தை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதால் ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டதாகவும் பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சாட்டிள்ளார்.
திருச்சி துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர், குடிநீர் பிரச்சினை, குப்பைகள் தேங்கிக் கிடந்தது தொடர்பாக முறையிட மண்ணச்சநல்லூரில் உள்ள துணை சபாநாயகர் ரவிசங்கரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் துணை சபாநாயகர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தன்னை தாக்கியதாக கார்த்திக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட கார்த்திக்குமார், மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், விஜய்யை நம்பி வாக்களித்ததாகவும், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஆனந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், துணை சபாநாயகர் ரவிசங்கருடன் அருகே அமர்ந்தபடி கார்த்திக்குமார், புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தை சிலர் தவறாக சித்தரித்து, உண்மைக்கு மாறாக பரப்பி வருவதாக கார்த்திக்குமார் கூறியிருந்தார்.
முன்னுக்குப்பின் முரணாக கார்த்திக்குமார் வெளியிட்ட வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது குற்றம் சாட்டி கார்த்திக்குமார் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தாங்கள் சொல்வது போல் பேசி வீடியோ வெளியிடாவிட்டால் குடும்பத்தை கொன்றுவிடுவோம் என மிரட்டியதாக கூறியுள்ளார். ஆறு, ஏழு முறை வீடியோ டேக் எடுத்து, அதிலிருந்து ஒரு வீடியோவை தேர்வு செய்து பின்னர் சமூக வலைதளங்களில் துணை சபாநாயகர் தரப்பினர் வெளியிட்டதாகவும் கார்த்திக் குமார் குறிப்பிட்டுள்ளார்.
















