ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில் சேவையை, ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ஹைட்ரஜன் ரயிலின் சிறப்பம்சங்களை விளக்கும் செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்……
170 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்திய ரயில்வே துறை, ரயில் சேவையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. முதன்முதலில் நிலக்கரி மூலம் இயங்கும் நீராவி என்ஜின்களுடன் தொடங்கப்பட்ட ரயில் சேவை, டீசல் என்ஜின், மின்சார என்ஜின் என கடந்து தற்போது ஹைட்ரஜன் எரிபொருளுக்கு மாறியுள்ளது.
கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் நோக்கில், ஹைட்ரஜன் ரயில்களை இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையில், 118 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன ஹைட்ரஜன் ரயில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. இந்த ரயில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் – லலித் கேரா இடையே சோதனையோட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே, லக்னோவில் உள்ள ரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பின் சிறப்புக் குழுவின் மேற்பார்வையில், ஜிந்த் – சோனிபட் இடையே 10 பெட்டிகளுடன் ஹைட்ரஜன் ரயில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
மின்சார ரயில்கள் தண்டவாளத்திற்கு மேலே இருக்கும் மின் கம்பிகள் மூலம் கிடைக்கும் மின்னாற்றலில் இயங்கும். ஆனால், ஹைட்ரஜன் ரயில் தனக்குத் தேவையான மின்சாரத்தை ரயிலிலேயே உற்பத்தி செய்து கொள்ளும். இதன் எஞ்ஜினில் ஹைட்ரஜன் எரிபொருள் கலன்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
ரயிலின் கூரையில் உள்ள சிலிண்டர்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் வாயு, வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனுடன் ஒரு வேதிவினையை ஏற்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அப்போது நச்சுப் புகைக்குப் பதிலாக தூய நீராவி மற்றும் வெப்பம் மட்டுமே வெளியேறுவதால், ஹைட்ரஜன் ரயில் ‘பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வு’ கொண்ட முழுமையான பசுமை ரயிலாக மாறுகிறது.
தீ விபத்தை தவிர்ப்பதற்காக, தானியங்கி எரிபொருள் கசிவு கண்டறியும் கருவிகள் மற்றும் தீப்பிழம்பு கண்டறியும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதிநவீன வடிவமைப்புடன் கூடிய இந்த ரயில் 2,400 கிலோவாட் திறனைக் கொண்டுள்ளது. முதற்கட்டமாக மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க ரயில்வே துறை தீர்மானித்துள்ளது. 8 பயணியர் பெட்டிகள், 2 எஞ்ஜின் பெட்டிகள் என மொத்தம் 10 பெட்டிகளைக் கொண்ட ஜைட்ரஜன் ரயிலில், ஒரே நேரத்தில் 2,500-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொள்ள முடியும்.
இந்தியா, நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த அகல ரயில் பாதைகளையும் மின்மயமாக்கி சாதனை படைத்திருந்தாலும், அடர்ந்த காடுகள் மற்றும் மலைப் பிரதேசங்களில் மின் இணைப்பு இல்லாத வழித்தடங்களில் டீசன் என்ஜின் ரயில்களுக்கு மாற்றாக ஹைட்ரன் ரயில்களை இயக்குவதையே முதன்மையான குறிக்கோளாக கொண்டுள்ளது.
ஹைட்ரஜன் ரயிலை இயக்க ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தை ரயில்வே அமைச்சகம் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் உள்ளது. ஒரு ஹைட்ரஜன் ரயில், வழக்கமான பயணிகள் போக்குவரத்து மற்றும் பொதுவான இயக்கச் சூழலில் எவ்வளவு பாதுகாப்பாக இயங்குகிறது என்பதை மிகவும் பொருத்தமான வழித்தடத்தில் மட்டுமே அறிய முடியும்.
ஹைட்ரஜன் ரயில் எளிதில் தீப்பற்றக்கூடிய புதிய தொழில்நுட்பம் என்பதால், ஆரம்பக்கட்ட சோதனைகளை அதிக நெரிசல் இல்லாத, அதே சமயம் முறையான உள்கட்டமைப்பு கொண்ட வழித்தடத்தில் மேற்கொள்ள ரயில்வே அமைச்சகம் விரும்பியது. அதனால், 89 கிலோமீட்டர் நீளமுள்ள, தினசரி ரயில் இயக்கத்திற்கு உகந்த ஜிந்த் – சோனிபட் பாதை தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதற்கு எரிபொருள் உற்பத்தி மற்றும் சேமிப்புக் கிடங்கு மிகவும் அவசியம் என்பதால், இந்தியாவின் மிகப்பெரிய ரயில்வே ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் தளம் ஜிந்த் இரயில் நிலையத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எரிபொருளை எளிதாக நிரப்பி, உடனடியாகப் ரயிலை இயக்கவும், கண்காணிக்கவும் இந்த வழித்தடம் ஏதுவாக இருக்கும். ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் ஹைட்ரஜன் ரயில் போக்குவரத்தில் கிடைக்கும் அனுபவங்களின் அடிப்படையாகக் கொண்டு, மலைப்பிரதேசங்களில் ஹைட்ரஜன் ரயில் சேவையை தொடங்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்த ரயில் சேவையின் மூலம், ஹைட்ரஜன் ரயில் போக்குவரத்தை செயல்படுத்தும் ஜெர்மனி, ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற உலகளாவிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. 2030-க்குள் இந்திய ரயில்வே துறையை, கார்பன் உமிழ்வற்ற துறையாக மாற்ற வேண்டும் என்ற இலக்கிற்கு இந்த ஹைட்ரஜன் ரயில் சேவை அடித்தளமிட்டுள்ளது.
















