தவெக ஆட்சிக்கு வந்த பின்பு ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் பலமுறை நடந்திருந்தாலும் தற்போது நடைபெற்றிருக்கும் அரசு உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்பதற்கான சமிஞ்சையாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தவெக ஆட்சியமைத்த பின், அரசு மற்றும் காவல் உயர் அதிகாரிகள் தொடர்ந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
முதலமைச்சரின் தனிச்செயலாளர்கள் தொடங்கி மாவட்ட ஆட்சியர்கள் வரையிலான முதல் சுற்று பணியிடமாற்றம் நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது சுற்று பணியிடமாற்றம் தொடங்கியுள்ளது.
முதல் சுற்றில் தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்த அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது சுற்றில் திமுகவுக்கு நெருக்கமான, திமுக ஆட்சியில் உயர்பொறுப்பில் இருந்தவர்களை தேர்ந்தெடுத்து பணியிடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
முதலமைச்சரின் தனிச்செயலாளர் நியமனத்தில் தொடங்கி பல்வேறு துறைகளின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் வரையிலான பணியிடமாற்றம் முடிவடைந்த நிலையில், இனி பணியிடமாற்றம் இருக்காது என நினைத்திருந்த அதிகாரிகளுக்கு புதன்கிழமை அரசு பிறப்பித்த உத்தரவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதவியிலிருந்து அருண் விடுவிக்கப்பட்டதும், உமாநாத் காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே மேலும் ஒரு பெரிய அளவிலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர்.
அரசு அண்மையில் பிறப்பித்த பணியிடமாற்ற உத்தரவில் நீண்ட ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளராக பதவி வகித்து வந்த சுப்ரியா சாகு மற்றும் மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரின் பணியிடமாற்றம் தான் மிகுந்த பேசுபொருளாகியுள்ளது.
சுப்ரியா சாகுவை பொறுத்தவரையில் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவராக இருக்கிறார். ராதாகிருஷ்ணனை பொறுத்தவரையில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு ஆட்சிக்காலத்திலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவராக அறியப்படுகிறார். இவர்கள் இருவரும் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில் திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
தவெக ஆட்சிக்கு வந்த பின்பு இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களாகவும், பல்வேறு துறைகளின் முக்கிய பொறுப்புகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படைத்தன்மையான ஆட்சி நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், புதிய அதிகாரிகளின் மூலமாகவே அதனை சாத்தியப்படுத்த முடியும் என நம்புவதன் விளைவே இத்தகைய சீரமைப்பு நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு ராதாகிருஷ்ணன் மற்றும் சுப்ரியா சாகு விரைவில் ஓய்வுபெற இருக்கும் நிலையில், அவர்களுக்கு மாற்றாக இளம் அதிகாரிகளை தயார்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இந்த பணியிடமாற்றத்திற்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மேலும் அரசு உயர் பொறுப்புகளை பொறுத்தவரையில் சில அதிகாரிகள் தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைக்கவும், இளம் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் துறை செயலாளர்களை அடிக்கடி மாற்றுவதன் மூலம் அத்துறையின் செயல்பாடுகள் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்படும் எனவும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இருப்பினும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் யாரும் எந்த துறைக்கும் நிரந்தரம் கிடையாது, எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்பதற்கான சமிஞ்சையாக இந்த பணியிடமாற்றம் அமைந்திருக்கிறது.
















