மேற்கு வங்கத்தில் வடக்கு 24-பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள அசோக்நகர் பைகாச்சி (Baigachhi) எண்ணெய் வயலில் வணிக ரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தியை ONGC அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டிலேயே மேற்கு வங்கத்தில் வடக்கு 24-பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பைகாச்சி பகுதியில் முதன்முதலாக எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது
2020-ஆம் ஆண்டில் ஒரு சோதனைக் கிணற்றில் இருந்து சுமார் 375 பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி, அப்போதைய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் அனுப்பும் பணியை முறைப்படித் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் தொழில்நுட்பச் சிக்கல்கள், கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பைகாச்சி எண்ணெய் வயலில் மேம்பாட்டு கிணறு Well AS-1Z மூலம் வெற்றிகரமாக வர்த்தக ரீதியான எண்ணெய் உற்பத்தி தொடங்கப் பட்டுள்ளது.
2018-ல் முதன்முதலில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட கிணற்றிலிருந்து சுமார் 95 மீட்டர் வடகிழக்கில் அமைந்துள்ள இந்தப் புதிய கிணற்றில், சுமார் 2396 மீட்டர் ஆழத்தில் வணிக ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய கச்சா எண்ணெய் கிடைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இந்த எண்ணெய் வயலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வணிகரீதியான கச்சா எண்ணெய் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஹல்தியா சுத்திகரிப்பு நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ONGC இயக்குநர் ஓ.பி. சின்ஹா மற்றும் அசோக்நகர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சுமய் ஹிரா ஆகியோர் எண்ணெயை ஏற்றிச் செல்லும் டேங்கர் கப்பலை முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளனர்.
தொடக்க விழாவின் போது 12000 லிட்டர் கச்சா எண்ணெய் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நாளொன்றுக்கு 20,000 லிட்டர் வரை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய ONGC திட்டமிட்டுள்ளது.
பைகாச்சி எண்ணெய் வயலில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மிகவும் இலகுவானது மற்றும் மிக உயர்ந்த தரம் வாய்ந்ததாகும். இது இந்தியாவின் புகழ்பெற்ற Mumbai High கச்சா எண்ணெயின் தரத்திற்கு இணையானது எனக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கப் படுகையில் ONGC-யின் முதல் வணிக ரீதியான ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி இதுவாகும். இதன் மூலம் மேற்கு வங்கம் இந்தியாவின் எண்ணெய் வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
அசோக்நகர் எண்ணெய் வயலில் இதுவரை எண்ணெய்க்காக நான்கு, இயற்கை எரிவாயுவிற்காக இரண்டு என மொத்தம் ஆறு கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் ஏற்கனவே சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஐந்து எண்ணெய் கிணறுகளை இப்பகுதியில் தோண்டி உற்பத்தியை அதிகரிக்கவும் ONGC திட்டமிட்டுள்ளது. இதற்காக புர்குண்டா, தௌலத்பூர் மற்றும் அசோக்நகரின் பிற பகுதிகளிலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எரிசக்தி இறக்குமதிச் சார்பைக் குறைப்பதற்கான இந்தியாவின் முயற்சியில் ஒரு மைல்கல்லாக வங்காள படுகையில் வணிக ரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், மாநிலப் பொருளாதாரம் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















