திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், பதைபதைக்க வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சக்கராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சேகரின் 3 மகள்களும், அவரது உறவினர் மகளும், பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். பொன்னையா சங்கராம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதாக கூறப்படுகிறது.
இதில், இரண்டு மாணவிகள் சம்பவ இடத்திலும், படுகாயமடைந்த மற்ற இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையடுத்து விபத்தில் உயிரிழந்த சுபிதா, நிவேதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
















