புற்றுநோய் சிகிச்சை, எலும்பியல், நரம்பியல், கருத்தரிப்பு சிகிச்சை, பல் மருத்துவம் மற்றும் அழகு சீரமைப்பு சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளுக்காக இந்தியா சர்வதேச நோயாளிகளை ஈர்த்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகளாவிய மருத்துவச் சுற்றுலா அமைப்பின் தரவரிசையின்படி, சர்வதேச நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுவதற்கு மிகச்சிறந்த 46 நாடுகளில் இந்தியா 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் காரணமாக மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
2020-ல் 1.83 லட்சமாக இருந்த இவர்களின் எண்ணிக்கை 2023-ல் 6.59 லட்சமாக உயர்ந்துள்ளது. 2025-ல் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 1.3 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவ சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அதே ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 4.5 லட்சத்தைக் கடந்துள்ளது.
2026-ல் நாட்டின் மருத்துவச் சுற்றுலாத் துறையின் மதிப்பு சுமார் 12.32 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நோயாளிகளின் மருத்துவ பயணத்தை எளிதாக்கும் வகையில் 171 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு இ-மெடிக்கல் விசா மற்றும் இ-மெடிக்கல் அட்டண்டன்ட் விசா போன்ற வசதிகளை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மருத்துவப் பயணம் என்பது ஒரு நோயாளி சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. நோயாளியுடன் சேர்ந்து வரும் அவரது குடும்பத்தார் மூலம், தங்குமிடம், உணவகங்கள் மற்றும் அவர்கள் சார்ந்த பல வகையான வர்த்தகமும் வளர வழி வகுக்கிறது.
எனவே “ஹீல் இன் இந்தியா” திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இதன் கீழ் மருத்துவமனைகள், வசதியாளர்கள், ஹோட்டல்கள், விமான நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பொது-தனியார் கூட்டாண்மைகள் மேம்படுத்தப் பட்டுள்ளன.
மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் அதிநவீன அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ வசதிகள் 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைவான செலவில் கிடைக்கின்றன. நவீன மருத்துவத்துடன் இணைந்து ஆயுர்வேதம் உள்ளிட்ட AYUSH சிகிச்சைகளும் வெளிநாட்டுப் பயணிகள் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவை தேர்ந்தெடுக்க காரணங்களாக உள்ளன.
சமீபத்தில் (Joshua Finlay) ஜோஷுவா ஃபின்லே மற்றும் (Tegan Durham) டீகன் டர்ஹாம் என்ற ஆஸ்திரேலியத் தம்பதியர் தங்களின் உடல் அழகை மேம்படுத்தும் அழகுச் சிகிச்சைகள் மற்றும் பல் சிகிச்சைகளுக்காக இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
Abdominoplasty தொடைப்பகுதி சீரமைப்பு, மார்பகத் திருத்த அறுவை சிகிச்சை, கை பகுதி சீரமைப்பு மற்றும் Liposuction போன்ற பல சிகிச்சைகள் செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி முதல் வரும் அக்டோபர் 11ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு மருத்துவமனைகள் மூலம் தங்களுக்கான சிகிச்சைகளைத் திட்டமிட்டுள்ளனர்.
மொத்தப் பயணம், தங்குமிடம் மற்றும் மருத்துவச் சிகிச்சைகளுக்காக 45 லட்சம் ரூபாய் வரை அதாவது சுமார் 66,000 ஆஸ்திரேலிய டாலர்கள் வரை செலவிடப்பட்டுள்ளது.
இதில் அடிவயிற்று சீரமைப்பு சிகிச்சைக்கு மட்டும் ஆஸ்திரேலியாவில் 35,000 ஆஸ்திரேலிய டாலர்கள் செலவாகும் என்றும், மற்ற சிகிச்சைகளுக்கும் சேர்த்து சுமார் இரண்டு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்ககளுக்கும் அதிகமாக செலவாகும் என்று அந்த ஆஸ்திரேலியத் தம்பதியர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக துருக்கி நாட்டுக்குச் சென்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இத்தம்பதியினர், தங்களின் இந்த விரிவான மருத்துவச் சிகிச்சைத் தேவைகளுக்கு இந்தியாவின் மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்பு மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றின் காரணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















