அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டவுள்ள பிரம்மாண்ட அணைக்கு எதிராக, அம்மாநிலத்தைச் சேர்ந்த ஜென் Z தலைமுறையினர் மற்றும் பழங்குடியின மக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவை எதிர்கொள்ள இந்தியா மேற்கொள்ளும் இந்த அணை திட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனா உரிமை கொண்டாடும் திபெத்தில் உள்ள யர்லுங் சாங்போ (Yarlung Tsangpo) ஆற்றின் மீது 60,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. இது உலகின் தற்போதைய மிகப்பெரிய நீர்மின் திட்டமான 22,500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சீனாவின் Three Gorges Dam திட்டத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரியதாகும்.
இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லைக்கு மிக அருகில் அமைய உள்ள இந்தத் திட்டம், இமயமலைப் பகுதி அதிக நிலநடுக்க பாதிப்புக்குள்ளாகும் (Seismically active) மண்டலத்தில் உள்ளது. மேலும் கீழ்நிலைப் படுகை நாடுகளான இந்தியா மற்றும் வங்கதேசத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
வறட்சி காலங்களில் சீனா இந்த அணையில் நீரைத் தேக்கி வைத்தால், வடகிழக்கு இந்தியா மற்றும் வங்கதேசத்தில் நீர் வரத்து கணிசமாகக் குறையும் அபாயம் உள்ளது.
அதேபோல் மழைக்காலங்களில் சீனா திடீரென அணையைத் திறந்துவிட்டால், அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
குறிப்பாக போர்க் காலங்களில் ஆற்றின் நீரையே ஆயுதமாக சீனா பயன்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
சீனாவின் இந்த அணைத் திட்டத்துக்கு எதிராக, சீனாவின் அணையிலிருந்து திடீரென வெளியேற்றப்படும் அதிகப்படியான நீரைத் தேக்கிப் பாதுகாக்கவும், நீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அருணாச்சல பிரதேசத்தில் 11,000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு பெரிய அணையைக் கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த அணை ‘நீர் பாதுகாப்பு’ அரணாகவும் விளங்கும் என்பதால் இந்தியாவிற்கு மிக முக்கியம் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணைகளைக் கட்டுவதற்கான திட்டங்கள் 1982-ம் ஆண்டிலிருந்தே உள்ளன. 2008-ல் Upper Siang திட்டத்தை ஒரு தேசியத் திட்டமாக மத்திய அரசு அறிவித்தது.
அரசு நிறுவனமான NHPC உருவாக்கி வரும் மின் உற்பத்தியுடன் பெரிய அளவிலான நீர் சேமிப்பையும் உள்ளடக்கிய இந்த திட்டம் திட்டமிடப்பட்ட அளவில் கட்டி முடிக்கப்பட்டால், இதுவே நாட்டின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாக அமையும் என்று கூறப்படுகிறது.
கிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு சியாங் (East Siang) மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள
இந்தத் திட்டம் ஆரம்பக்கட்ட சாத்தியக்கூறு அறிக்கை’ (Preliminary Feasibility Report – PFR) க்கான ஆய்வு நிலையில் தான் உள்ளது. இந்த ஆய்வுப் பணிகள் இந்த நவம்பர் முதல் வரும் ஜனவரி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வுகளுக்கு அனுமதி அளித்தால், எதிர்காலத்தில் திட்டத்தை எதிர்ப்பது கடினமாகிவிடும் என்ற காரணத்தால் போராட்டக் குழுக்களும், ஜென்Z மாணவர்களும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக சியாங் பள்ளத்தாக்குப் பகுதியில் மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் அதிரடிப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இது தங்களை அச்சுறுத்தி, ஒப்புதல் பெற நடக்கும் முயற்சி என ஜென் Z இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அணைக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட சில உள்ளூர் Facebook பக்கங்கள் முடக்கப்பட்டதும், ஜென் Z தலைமுறையினரின் போராட்டத்தை வேகப்படுத்தியுள்ளது.
சியாங் நதிப் படுகையில் வாழும் பூர்வீகப் பழங்குடி சமூகமான ‘ஆதி’ (Adi) இன மக்கள், இந்த அணை கட்டப்பட்டால் தங்களின் முன்னோர்களின் நிலங்கள், வளமான விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் முழுமையாக நீரில் மூழ்கிவிடும் என்று அஞ்சுகின்றனர்.
குறிப்பாக இந்த அணை 27 கிராமங்களை மூழ்கடிக்கக்கூடும் என்றும், 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரையிலான பழங்குடி மக்களை இடம்பெயரச் செய்யக்கூடும் என்றும் சியாங் பழங்குடி விவசாயிகள் மன்றம் கூறியுள்ளது.
‘ஆதி’ பழங்குடியின மக்களுக்கு சியாங் நதி வெறும் நீர் ஆதாரமோ அல்லது மின்சாரம் தயாரிக்கும் இடமோ அல்ல; மாறாக, அவர்கள் தங்களின் மொழியில் இந்நதியை ‘அனே’ (அதாவது ‘தாய்’) என்று போற்றி வணங்குகின்றனர். நதியோடு பிணைந்துள்ள தங்களின் கலாச்சாரம், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வீக அடையாளம் இந்த அணைத் திட்டத்தால் அழிந்துவிடும் என்று ஜென் Z தலைமுறையினர்கூறுகின்றனர்.
ஆதி பானே கெபாங் யுனைடெட் மற்றும் பிற அமைப்புகளால் நடத்தப்பட்ட 12 மணி நேர பந்த் மாலை 5 மணிக்கு முடிவடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. NHPC அலுவலகம் மற்றும் ஒரு காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்திய போராட்டக்காரர்கள் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில பாஜக தலைவரின் வீடுகளையும் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளனர்.
அடுத்த உத்தரவு வரும் வரை மக்கள் கூடுவதற்குத் தடை உத்தரவு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஆதி பன்னே கெபாங் அமைப்பு ஆரம்பகட்ட சாத்தியக்கூறு அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ள நிலையில் பாரம்பரிய கிராம சபை அமைப்புகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தவும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும் அனைத்து ஆதி இளைஞர் சங்கம், அழைப்பு விடுத்துள்ளது
Siang Upper Multipurpose Project குறித்த தவறான தகவல்களும், கருத்துகளும் மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன என்றும், உண்மைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் வெளிப்படையான உரையாடல் ஆகியவற்றின் மூலம் இந்தத் தகவல் இடைவெளியைக் குறைப்பது அவசியமாகும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு அழைப்பு விடுத்துள்ளார்.
















