வான்புகழ் வள்ளுவர் எழுதி அருளிய ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங் குறட்பாக்களும் படிக்குந்தொறும் படிக்குந்தொறும் எண்ணுந்தொறும் எண்ணுந் தொறும் பற்பல புதிய சிந்தனைகளைத் தருகின்றன. ஒவ்வொரு குறட்பாவும் பல நூறு கருத்துக்களை விளக்கும் திட்பநுட்பம் உடையது; கதைகள் எழுதத் தூண்டும் மாட்சிமை கொண்டது; நாடகங்களை ஆக்கவைக்கும் வகையது’ ஓவியங்களை வரையச் செய்யும் தன்மையது; இன்னும் பல்வகை இலக்கியங்களைப் படைக்க வழிகோலும் திறத்தது!
நம் செந்தமிழ் மொழியில் எண்ணிறந்த இலக்கியங்கள் உள்ளன. பல்வேறு வகைகளில் வெவ்வேறு பாடு பொருள்களைக் கொண்டு விளங்குகின்றன. அந்தந்தக் காலத்திற்கேற்ப சூழ்நிலை வாழ்நிலைக்கு ஏற்ப அவை முகிழ்த்துள்ளன. பண்டைக் காலந்தொட்டு இக்காலம் ஈறாக உள்ள ஒவ்வொரு இலக்கியத்திலும் கதைக்கரு அல்லது இன்றியமையா நோக்கு ஒன்று உண்டு. அந்தமையக் கருவினைப் பாவிகத்தை உணர்த்தும் வகையில் சில குறட்பாக்கள் உள்ளன. அவை என்னென்ன? அவை எந்தெந்த இலக்கியங் களைச் சுட்டுகின்றன? என அறிய நம் மனம் முற்படுகிறதல்லவா? ஒவ்வொன்றாகக் காணலாமே.
தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற
சொற்காத்துச் சேர்விலாள் பெண். (திருக்குறள்-56)
என்ற குறட்பா சிலப்பதிகாரத்தை உணர்த்துகிறது எனலாம்.
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்
என்ற சிலப்பதிகாரப் பதிகப் பாடல் மூலம் சூழ்வினைச் சிலம்பின் காரணத்தால் விளைந்தது சிலம்பதிகாரம் என அறிவோம். அந்தச் சிலம்பினை அணிந்த கண்ணகியே சிலம்பதிகாரக் காப்பிய நாயகி என்பது வெள்ளிடை மலை.
வணிகப் பெருஞ்செல்வன் மாசாத்துவான் மகன் கோவலன், பெரு நிதியுடைய மாநாய்கண் மகள் கண்ணகியை
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீலவிதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்.
பல்லோர் முன்னிலையில் முறைப்படி மணந்தான். இருவரும் நல்லறம் பேணி இல்லறம் நடத்தினர். ஒருநாள் கலையரசி மாதவியின் ஆடலில் மனத்தைப் பறிகொடுத்தான் மண் தேய்த்த புகழினான் கோவலன். இல்லத்தரசி கண்ணகியை மறந்து, அந்த மாதவி என்னும் தையலின் மையலில் ஈடுபட்டுத் தன்னையே மறந்தான். மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருகுணத்துக் காதலாள் கண்ணகியோ, தன் கணவன் மற்றொரு பெண்ணினால் மயக்கமுற்றுத் தன்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டான் என்பதை அறிந்தும் அதற்காகப் பெரிதும் மனம் உடைந்து ஓவென்று கதறவில்லை. தன் பெற்றோரிடமோ, கோவலன் பெற்றோரிடமோ தன் கணவனின் தீச்செயலைக் கூறவில்லை. கணவன் வழிதவறிச் சென்றுவிட்டானே. நாமும் நெறி பிறழலாமே என நெஞ்சாலும் நினைக்கவில்லை. கணவன் மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாளின் மயக்கினால் மயங்கித் தன்னை மறந்து அவளுடன் சென்றுவிட்டான்; மயக்கம் தெளிந்த பின் மீண்டும் தன்னை நினைந்து இல்லம் திரும்புவான் என்ற மன உறுதியோடு இருந்தாள் கண்ணகி. இவ்வாறு கண்ணகி தன் கணவன் தடம்புரண்டுச் சென்றாலும் தன் கற்பினைக் காப்பதிலும் தன்னைக் காப்பதிலும் சோர்விலாத பொண்ணாகத் திகழ்ந்தாள்.
கண்ணகி, கணவன் கோவலனை மணந்து கொண்ட நாள் முதல் இறுதிவரைக் கணவன் நலம் பேணினாள். தன் கணவன் ஆடலரசி மாதவியின் மயக்கில் ஈடுபட்டுத் தன்னிடம் வந்து பொருள் கேட்கும் பொழுதெல்லாம் கொடுத்து, விடுதலறியா விருப்பினன் என உணர்ந்தும் அவன் விருப்பத்தை நிறைவேற்றினாள். தன் கணவன் விருப்பிற்காகத் தன்னையே ஈந்தாள் எனில் மிகையன்று. கணவனின் வேண்டுகோளுக்கு மாறாகச் செயல்படவில்லை. பின்னர் மாதவியைத் துறந்து தன்னை மீண்டும் அடைந்த உடன் அவன்மீது சீற்றம் கொண்டு மணமுறிவு மனு கொடுக்கவில்லை. மாறாக
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை.
உடையவளாய் மகிழ்வுடன் வரவேற்றாள். கோவலன் தன் தவற்றை உணர்ந்து அனைத்துப் பொருட்களையும் கணிகையிடம் தொலைத்துவிட்டு வறுமையோடிருக்கும் என்னிலை எனக்கே வெட்கத்தைத் தருகிறது என வெளிப்படையாக மனைவி கண்ணகியிடம் கூறியதும் அவள்,
சிலம்புள கொண்ம்
என்றாள். கோவலன் கண்ணகியிடம் அவள் காற்சிலம்பை விற்று, அதன் மூலம் பெறும் பெருநிதி கொண்டு மதுரையில் வணிகம் புரிந்து, இழந்த பொருளை மீண்டும் அடையலாம் எனக் கூறியவுடன், அதற்கு உடன்பட்டாள்; கணவனோடு புகார் நகரை விட்டு மதுரைக்குக் கால் நடையாகவே சென்றாள்; தன் வண்ணச் சீறடியில் கல்லும் முள்ளும் குத்துமே என எண்ணவில்லை; கணவன் நலம் பேணிச் சென்றாள்!
மதுரையை அடைந்து மாதரி வீட்டில் தங்கியிருந்த போது கணவனுக்கு இலைபோட்டு நீர் தெளித்துத் துடைத்து உணவு பரிமாறி உபசரித்த திறம் போற்றத்தக்கது.
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கென
உணவு உண்டபின் கோவலன், தான் செய்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டுக் காட்டி, அவற்றைக் கொடிய வல்வினைப் பயனால் நிகழ்த்தினேனோ எனக் கூறிவிட்டு, மற்றொன்றும் கேட்கிறான். இத்தனைத் தவறுகளைப் புரிந்த நான் மதுரைக்குப் புறப்படு என்றதும் ஆராயாமல் உடனே எழுந்து என்னுடன் வந்தாயே! என்ன காரியஞ் செய்தாய்? எனக் கேட்ட உடன், கண்ணகி உறுதிப்பாட்டோடு கூறும் மறுமொழிகள் அவள் உள்ளக்கிடக் கையைத் தெள்ளத் தெளிவாகக் காட்டும்
போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா வுள்ள வாழ்க்கையேன் ஆதலின்
ஏற்றேன் எழுந்தனன் யான்.
பின்னர் கணவனிடம் தன் காற் சிலம்பு ஒன்றினைக் கழற்றிக் கொடுத்து வழியனுப்பினாள்.
பாண்டிய மன்னனால் கோவலன் கள்வன் எனக் குற்றம் சுமத்தப்பட்டுக் கொலையுண்டான் என்ற செய்தி கேட்டு எரியும் சக்தியானாள்; காய்கதிர்ச் செல்வனை நோக்கிக் கேட்டாள்,
காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என்கணவன்?
கள்வனோ? அல்லன்! கருங்கயற்கண் மாதராய்!
ஒள்ளெரி யுண்ணுமிவ் வூர்!
என்றது ஒருகுரல்.
பாண்டிய மன்னனிடம் கண்ணகி தன்னை அறிமுகப்படுத்திய விதம் தற்கொணடான் கோவலனின் குலப் பெருமையையும் குண மேன்மை யையும் உணர்த்துவதற்காகத்தான் மற்றொரு சிலம்பினை உடைத்து மன்னனின் குற்றம் உணர்த்தித் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் மற்றையோருக்கும் சான்று காட்டி நிறுவினாள்! புகாரில் சில சொற்களையே பேசிய சீரெழிலாள் கண்ணகி, தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை நிறுவப் பல சொற்களைப் பேசிச் சொல்லின் செல்வியாக மாறுவது தேவை கருதித்தானே!
தற்கொண்டானைப் பேணுவதற்குத் தானே! பேணிக் காத்த தன் கணவனைத் தரணியில் உள்ள சான்றோரும் மற்றோரும் கள்வன் எனத் தூற்றக்கூடாது என்பதற்குத் தானே!
கணவன் குற்றமற்றவன்; கள்வன் அல்லன்! என்பதைக் கண்ணகி நிறுவியதன் மூலம், தகைசான்ற ஆன்றோர்களின் பழிக்கு ஆளாகாமல் தன் கணவனைக் காத்தாள்! மேலும் சாட்சிக்குக் கதிரவனை விளித்துக் கேட்டு தன் கணவன் கள்வன் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டாள். அதை மற்றையோருக்கும் தெரியபடுத்தவே மதுரை மாநகரை எரித்தாள்! மதுரை நகரை எரியூட்ட வந்த எரி கடவுளிடம்.
பார்ப்பார் அறவோர் பசுபத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழுவியெனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க!
எனக் கூறிச் சான்றோர்களின் பழிச்சொல்லுக்கும் ஆளாகாமல் இருந்தாள்.
அத்தனையும் அழித்ததோடு சோர்ந்து விடவில்லை; இறந்த கணவனை அடைய வேண்டும் என்ற வேட்கையோடு மதுரையின் நீங்கிச் சேரநாடு புகுந்தாள்; ஆங்குத் திருச்செங்கோட்டு மலைக்குச் சென்று வேங்கை மரத்தின் கீழ் நின்று விண்ணினின்று இழிந்த விமானம் ஒன்றில் வந்த கோவலனைத் தொழுது விண்ணுலகிற்குச் சென்றாள்!
தெய்வந் தோழாஅள்! கொழுநற் றொழுவாளைத்
தெய்வந் தொழுதகைமை திண்ணிதால் தெய்வமாய்
விண்ணக மாந்தர்க்கு விருந்து.
இவ்வாறு தன்னைக் காப்பதில் சோர்விலாது விளங்கித், தன் கணவன் நலனைப் பேணுவதில் சிறிதும் தளராது சிறந்தோங்கித், தன் கணவன் மீது சுமத்தப்பட்ட பழி துடைத்துப் பார் போற்றச் சோர்விலாது ஒளிர்ந்த கண்ணகி கதை கூறும் சிலப்பதிகார இலக்கியம்
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (திருக்குறள்-56)
என்ற குறட்பா உணர்த்தும் இலக்கியம் எனக் கூறலாமல்லவா?
தசரதச் சக்கரவர்த்தியின் தலைமகன் இராமன், தந்தை தாய்ப் பேணி மூத்தோர் சொல் அமிர்தம் என்பதை முழுமூச்சாய்க் கடைப்பிடித்தான்; தம்பியரை உயிரினும் மேலாய் நேசித்தான்; வசிட்டரின் சீடனாய் கல்வி கேள்விகளிற் சிறந்து, வில்வித்தையிலும் வீரதீரச் செயல்களிலும் மிக்கு ஒளிர்ந்தான்; விசுவாமித்திரரின் வேண்டுகோளுக்கு இணங்கி முனிவர்களின் வேள்வி காத்த செம்மலாய்த் திகழ்ந்தான்; ஜனக மன்னன் நடத்திய சுயம்வரப் போட்டியில் கலந்து கொண்டு வில்லை வளைத்துச் சீரெழிலாள் சீதையை மணந்தான்; தாய் கைகேயியின் விருப்பிற்கேற்ப அரசாளாமல் கானகம் புகுந்தான்; அவனோடு மனைவி சீதையும் தம்பி இலக்குவனும் சென்றனர். ஆங்குப் பர்ணசாலையில் மனையாள் சீதையோடு இல்லறம் நடத்தினான்.
இத்தகைய மகிழ்ச்சியான இராமனின் இல்லற வாழ்க்கையில் வலிந்து குறுக்கிட்டான் இலங்கை வேந்தன் இராவணன்! தேவரையும் மூவரையும் யாவரையும் வென்று சாமகானம் பாடி, சபாஷ் வாங்கிய இலங்கை வேந்தன், வாரணம் பொருத மார்பை உடையவன்; வரையினை எடுத்த தோளை உடையவன்; நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவை உடையவன்; சங்கரன் கொடுத்த வாளை ஏந்தியவன்; அணிகலன்களால் அலங்கரித்த பத்துத் தலைகளை உடையவன்; இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட இராவணன் தங்கை சூர்ப்பனகையின் மந்திரச் சொற்களால் மதி மயங்கினான். மாயமானைக் காட்டி இராமனையும் அவன் தம்பி இலக்குவனையும் ஓடச் செய்துவிட்டுக் கற்புக்கனலி சீதையைக் கவர்ந்து சென்றான். அதனால் இராம-இராவணன் போர் மூண்டது. அதில் இராவணன் தன் புதல்வர்களையும் தம்பியரையும் இழந்து தானும் அழிந்தான்! ஏன்? அரக்கர் குலமே அழிந்தது! தம்பி வீடணன் அதற்கு விதிவிலக்கு. ஏனெனில் அவன் அறத்தின் நாயகன்! இராமனிடம் அடைக்கலம் புகுந்ததால் உயிர் பிழைத்தான்; பிறன்மனை நோக்காப் பேராண்மையுடன் விளங்கியதால் அறத்தின் காவலன் ஆனான். இதனால் இராமகாதையில் இழைந்தோடும் கதைக்கரு பிறன்மனை நோக்காப் பேராண்மை என நன்குத் தெளியலாம்.
பத்தாயிரம் பாடல்களுக்கும் மேலுள்ளது இராமாயணம்! அந்தப் பெரிய, மிக நீண்ட கதையை இரண்டு மூன்று அல்லது நான்கு அடிகளில் சுருக்கமாகக் கூறி விடுகின்றன பல இலக்கியங்கள்! சான்றாக
கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை
வடிவாள் அரக்கன் வவ்விய ஞான்று.
என்பது புறநானூறு! அதாவது இராவணன் ஒருவன் இருந்தான்; இராமன் ஒருவன் இருந்தான்; சீதையை இராவணன் அபகரித்தான் என்று சொல்கிறது.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்ப வகைமுடியத்
தாவிய சேவடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கைக் கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியோ.
என்ற சிலப்பதிகாரப் பாடலும் இராமகாதையை இரத்தினச் சுருக்கமாகக் கூறுகிறது.
தேவியை வெளவிய தென்னிலங்கைத் தசமாமுகன்
பூவியலும் முடிபொன்றுவித்த பழிபோய் அற
ஏவியலுஞ் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்.
என்ற தேவாரப் பாடல் தெளிவுறுத்துகிறது இராமகாதையை.
இவ்வாறு பிற இலக்கியங்கள் இராமகாதையை மேற்கோளாகச் சொல்லும்போது, பிறன்மனை நோக்காப் பேராண்மை இழந்த இராவணன் தன்னை அழித்த அண்ணல் இராமன்! என்றே மொழிகின்றன. பேராண்மை மிக்க இராவணன், பிறன்மனை நோக்காப் பேராண்மை இல்லாததால் அழிந்தான்; அவன் கற்ற கல்வியும், பெற்ற சிறப்புக்களும் பேசப்படாமல் ஒழிந்தன! எனவே.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனன்றோ ஆன்ற ஒழுக்கு. திருக்குறள்-148
என்ற குறட்பா உணர்த்தும் இலக்கியம் இராமாயணம் எனத் தெளிவுடன் மொழியலாம் தானே!
இந்தியத் திருநாட்டின் இரு கண்கள் எனத் திகழும் இதிகாசங்கள் மகாபாரதமும் இராமாயணமும் ஆகும். வியாசர் அருளிச் செய்த மகாபாரதம் பொறாமையால் பொசுங்கிய துரியோதனனின் தீச்செயல்களை நன்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. வால்மீகி பாடிய இராமாயணம் பொறாமையின் குழவியான வெஃகுதலையும், அதன் வெளிப்பாடாய்த் திகழும் பிறன்மனை நோக்கிய இழிச்செயலின் இலக்கணமாய் இலங்கும் இலங்கை வேந்தன் இராவணனின் ஆணவப் போக்கினையும் சிறப்பாகச் சித்தரித்துக் காட்டுகிறது.
ஒரே குலத்தில் தோன்றியவர்களே பஞ்சபாண்டவர்களும் கெளரவர்களும். தருமனைத் தலைவனாகக் கொண்ட பீமன், அர்ச்சுனன்ம் நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரும், அண்ணன் தருமன் எவ்வழி அவ்வழி நடந்தனர். கெளரவர் தலைவர் துரியோதனன். கெளரவர்கள் நூற்றுவர். கெளரவர்களும் பஞ்ச பாண்டவர்களும் அண்ணன் தம்பியர்! இருவரும் சகோதரப் பாசமின்றிப் பிளவுபட்டதன் காரணமே பொறாமைத் தீ தான்!
பாண்டவர்கள் ஐவரும் கல்வி கேள்விகளிலும் பல்வேறு கலைகளிலும் வீரதீரச் செயல்களிலும் சிறந்தோங்கினர். தருமன் பொறுமையின் சின்னமாகவும், அறத்தின் நாயகனாகவும், தம்பியர் நால்வரையும் தோழமை உணர்வோடு அரவணைத்துச் செல்லும் அண்ணலாகவும், திகழ்ந்ததால் உலகம் போற்றும் உத்தமனாக ஒளிர்ந்தான்! பீமன் வீர தீரச் செயல்களின் விளை நிலமாக விளங்கினான்; அர்ச்சுனன் வில்வித்தையில் வேந்தனாக மிளிர்ந்து வில்லுக்கு விசயன் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான்; வான நூற்கலையிலும் நாள்கோள் பார்ப்பதிலும் வல்லவர்கள் நகுலனும் சகாதேவனும்!
பஞ்சபாண்டவர்கள் அனைவரும் பொருட் செல்வமும் அருட்செல்வமும் கலைச்செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தனர். அதனால் பலராலும் ஏற்றிப் போற்றப்பட்டனர். வேள்விகள் புரிந்து விண்ணவரும், மண்ணவரும் மகிழும் வகையில் விருந்து பல படைத்தனர்! விருந்தினர் எல்லோருக்கும் அவரவர்தம் தகுதி அறிந்து சன்மானம் வழங்கினர். அதனால் இந்திரத்துவம் பெற்று இனிய நன்னெறியில் வாழ்ந்தனர்.
பாண்டவரின் இத்தகு சிறப்புக்களையெல்லாம் கண்டு உள்ளம் பொங்கிப் பொதும்பினான் துரியோதனன். அதற்குத் தானும் தம்பியரும் என்ன செய்யவேண்டும் என எண்ணாமல் பாண்டவர் வளர்ச்சியையும் மலர்ச்சியையும் கண்டு மனம் புழுங்கினான்; பொறாமை கொண்டான்; அழுக்காறுடையவனாய் திகழ்ந்தான்!
உலகு தொடங்கிய நாள்முதலாக நம்சாதியில் புகழ்
ஓங்கி நின்றார் இத்தருமனைப் போல் எவர்?
ஏற்றமும் மாட்சியும் இப்படி உண்டுகொல்?
எதனை உலகில் மறப்பினும் யான் இனி மாமனே இவர்
யாகத்தை என்றும் மறந்திடல் என்பதொன்று ஏது காண்?
இப்பிறவிக்குள் இவையொத்த விருந்துகள் புவி
எங்கணும் நான் கண்டதில்லை.
பண்ணும் வேள்வியில் யார்க்கும் முதன்மை அவர் தந்தார்
என்று துரியோதனன், மாமன் சகுனியிடம் பாண்டவரின் அரும் பெரும் செயல்களை விளக்கினான். அவர்தம் வெற்றிக்குப் பின்னே ஒளிந்திருக்கும் முயற்சியையும் முழு உழைப்பையும் சிறிதளவும் நினைத்துப் பார்க்காமலும் அவற்றை ஆற்ற இயலாத தனது இயலாத் தன்மைக்கு நாணப்படாமலும் பாண்டவர் மீது பொறாமை கொண்டான் துரியோதனன்.
இந்திரத்துவம் பெற்று இவர்வாழும் நெறிநன்றே இதை
எண்ணி எண்ணி என்நெஞ்சு கொதிக்குது.
என்று பலப்பலவாறு நினைத்து நினைத்து ஏழையாகிப் பிறர் இரக்கத்திற்கும் ஆளானவன் துரியோதனன்!
துரியோதனனின் பொறாமைத் தீயானது நிலத்தின் அடியிலிருந்து மிக வேகத்துடன் வெளிப்படும் எரிமலைக் குழம்பு போலவும், அது அழிக்கவியலா மலையையும் இளகச் செய்து அழித்திடும் ஆற்றல் பெற்றதாயும் இருந்ததாக மகாகவி பாரதியார் பாடியுள்ளார்.
குன்றமொன்று குழைவிற் றிளகிக்
குழம்பு பட்டழி வெய்திடும் வண்ணம்
கன்று பூதலத் துள்ளுறை வெம்மை
காய்ந்தெழுந்து வெளிப்படல் போல
நெஞ்சத் துள்ளோர் பொறாமை யெனுந்தீ
நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்போய்
மஞ்சன் ஆண்மை மறம் திண்மை மானம்
வன்மை யாவும் மறந்தனன் ஆகிப்
பஞ்சையாமொரு பெண்மகள் போலும்
பாலர் போலும் பரிதவிப்பானாய்க்
கொஞ்ச நேரத்திற் பாதகத்தோடு
கூடியே உறவெய்தி நின்றானால்
யாது நேரினும் எவ்வகையானும்
யாதுபோயினும் பாண்டவர் வாழ்வைத்
தீது செய்து மடித்திட எண்ணி
பாண்டவரை சூதாட்டத்திற்கு அழைத்தான் துரியோதனன் மாமன் சகுனியின் சூழ்ச்சியால்!
சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்றாலும், மாபாரதப் போரில் வென்றனர்! பாஞ்சாலி சபதமும், பீமன் சபதமும், அர்ச்சுனன் சபதமும் நிறைவேறின. எனவே மகாபாரத்தில் இழைந்தோடும் கதைக்கரு பொறாமைத் தீ எனத் துணிந்து மொழியலாம்! தெள்ளுதமிழ் வள்ளுவர் பொறாமையினைப் பற்றி அழுக்காறாமை அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களில் பாடியுள்ளார். அதில்,
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். திருக்குறள்-168
எனும் குறட்பா உணர்த்தும் இலக்கியம் மகாபாரதம் எனில் தெளிவே! அழுக்காறின் மொத்த உருவாய் விளங்குகிறவன் துரியோதனன்! அவன் கொண்ட பொறாமைத் தீ அவனது நாட்டையும் செல்வத்தையும் தம்பியரையும் கெளரவர் குலத்தையும் அழித்ததோடு, அவனையும் அழித்து விட்டது. அழுக்காறு எனும் தீக்குணத்தைப் பாவி என வருணிக்கிறார் வள்ளுவர் அழுக்காறு என ஒரு பாவி எனக்கூறும் குறட்பாத்தொடர் துரியோதனைக் குறிக்கிறது எனில் மிகையன்று!